100% கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

100% கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனியார் பள்ளி நிர்வாகங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இதனை விசாரித்த ஐகோர்ட், இந்த ஆண்டு பள்ளி கட்டணத்தில் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்கலாம். அதில் முதல் தவணையாக 40 சதவீத கட்டணத்தை செப்டம்பர் இறுதிக்குள் வசூலிக்கலாம் என்று ஐகோர்ட் உத்தரவிட்டது.

ஆனால் பெரும்பாலான பள்ளிகள் ஐகோர்ட் உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தை வசூலித்திருப்பதாக ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பள்ளிக் கல்வித் துறை துணை செயலாளர் ஜெயலலிதா சார்பில் ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக 111 புகார்கள் பெறப்பட்டன. இதில் 97 புகார்கள் நிரூபணமாகவில்லை.

9 பள்ளிகள் 100 சதவீத கட்டணத்தை வசூலித்திருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த 9 பள்ளிகளுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு எதிராக பெற்றோர் எளிதில் புகார் அளிக்கும் வகையில் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி விளம்பரம் செய்து புகார்களை பெற வேண்டும்.

இதுதொடர்பாக அக்டோபர் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *