கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கல்வித் துறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து இன்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் இன்று வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி வரும் 13-ம் தேதி முதல் தொலைக்காட்சி மூலமாக வகுப்புகளை நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் பழனிசாமி ஆன்லைன், தொலைக்காட்சி வழி திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில் வரும் கல்வியாண்டில் கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் இன்று உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
டிபிஐ வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் கல்வித் துறை இயக்குநர்கள், மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதில் எடுக்கப்படும் முடிவுகள் முதல்வர் பழனிசாமியிடம் பரிந்துரைகளாக அளிக்கப்பட உள்ளது. முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் புதிய பரிந்துரைகள் அமல் செய்யப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.