` உன்னைப் பெயிலாக்கிவிடுவேன்’ என மிரட்டிய ஆசிரியர் வெங்கடேசன், மாணவியை கர்ப்பமாக்கியிருக்கிறார். மாணவி அளித்த தகவலின்படி ஆசிரியர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஆசிரியர் வெங்கடேசன்
திருவண்ணாமலையை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். 31 வயதான இவர், தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றிய பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிக்கு வெங்கடேசன், பாலியல் தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார்.
ஆசிரியர் வெங்கடேசன் குறித்த தகவல்கள் பள்ளி நிர்வாகத்துக்கு தெரியவந்ததும் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகும் ஆசிரியர் வெங்கடேசன், 9-ம் வகுப்பு மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
மாணவி கர்ப்பம்
இந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மாணவியின் வீட்டுக்குச் சென்ற வெங்கடேசன், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சொல்லப்படுகிறது. அதை வெளியில் சொல்லக்கூடாது என வெங்கடேசன், மாணவியை மிரட்டியிருக்கிறார்.
அதனால் மாணவியும் வெளியில் சொல்லவில்லை. மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. அவரை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றபோது மாணவி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
அதுகுறித்து மாணவியிடம் பெற்றோர் கேட்டபோதுதான் வெங்கடேசன் குறித்த தகவலைச் சொல்லியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனிடம் விசாரித்தனர்.
போக்சோ
விசாரணையில் மாணவியை பெயிலாக்கி விடுவேன் என மிரட்டியே வெங்கடேசன் அவரிடம் சில ஆண்டுகளாக பாலியல் தொல்லைக் கொடுத்தது தெரியவந்தது. அதன்பிறகு போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்திருக்கின்றனர். வெங்கடேசனுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடந்திருக்கிறது. இவர், பணியாற்றிய பள்ளியில் வெங்கடேசனால் வேறு எந்த மாணவியாவது பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருமணம்
இதுகுறித்து திருவண்ணாமலை போலீஸார் கூறுகையில், “மாணவி, 6 மாதமாக கர்ப்பமாக உள்ளார். அவரிடம் விசாரித்தபோதுதான் கர்ப்பத்துக்கு வெங்கடேசன்தான் காரணம் எனத் தெரியவந்தது. மாணவி அளித்த தகவலின்படி வெங்கடேசனைக் கைது செய்திருக்கிறோம். மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய ஆசிரியர் அவரிடம் நெருக்கமாக பழகி வந்திருக்கிறார். ஆனால் மாணவியை திருமணம் செய்யாமல் கடந்தாண்டு வேறு ஒரு பெண்ணை வெங்கடேசன் திருமணம் செய்த தகவலும் தெரியவந்திருக்கிறது” என்றனர்.
ஆசிரியர், மாணவர்கள் புனிதத்தை தாண்டி வெங்கடேசன் செயல்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.