அக். 1 முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம்

அக். 1 முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிக்கு வரலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை தொடங்கலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அனுமதி அளித்துள்ளது. இதன்பேரில் கடந்த 21-ம் தேதி முதல் ஆந்திரா, அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மேல்நிலைப் பள்ளி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு இன்று ஓர் அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர் விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிக்கு வரலாம்.

அரசு, தனியார் பள்ளிகளில் 50 சதவீத ஆசிரியர்களை கொண்டு பாடம் நடத்தலாம். தினசரி 50 சதவீத மாணவர்களை சுழற்சி முறையில் அனுமதிக்கலாம். பருவநிலை சரியாக இருந்தால் வகுப்பறைக்கு வெளியே பாடம் நடத்தலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் பள்ளிகளைத் திறக்கக்கூடாது என்று அரசாணையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *