செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி
கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தப்பில் உச்ச நீதிமந்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது என்று யுஜிசி வாதிட்டு வருகிறது.


இந்த பின்னணியில் சிவசேனா இளைஞர் அணி மற்றும் 31 மாணவர்கள் சார்பில் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இவ்வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.


மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை யுஜிசி பின்பற்றாமல் செமஸ்டர் தேர்வை நடத்த உத்தரவிட்டுள்ளது. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார்.


யுஜிசி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அலாக் அலோக் வாதிடும்போது, “செமஸ்டர் தேர்வு நடைபெறவில்லை என்றால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அவர்களின் நலன் கருதியே தேர்வு நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “தேர்வு நடைபெறாது என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்க வேண்டாம்.

செமஸ்டர் தேர்வுக்கு தயாராக வேண்டும்” என்று தெரிவித்தார்.
யுஜிசியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை நீதிபதிகள் ஏற்கவில்லை. இறுதியில் நீதிபதிகள் கூறும்போது, ” இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவான பதிலை அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *