சென்னை- 24 மணி நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

வில்லிவாக்கம் குழந்தை

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய 5 வயது மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த சாமிநாதன்(34) தாயின் அருகில் படுத்திருந்த 5 வயது பெண் குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

நள்ளிரவில் பெண் குழந்தை அலறியது. உடனே சாமிநாதன் குழந்தையின் வாயை பொத்தினார். குழந்தை அழும் சத்தம் கேட்டு எழுந்த தாய், மகளைத் தேடினார். அப்போது சாமிநாதனிடம் குழந்தை இருப்பதைப் பார்த்து சத்தம் போட்டார். உடனே குழந்தையை விட்டு விட்டு அவர் ஓடினார். அதன்பிறகு குழந்தையிடம் விசாரித்தபோதுதான் சாமிநாதன், குழந்தையிடம் தவறாக நடக்க முயன்ற தகவல் தெரியவந்தது.


இது குறித்து குழந்தையின் தாய் வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாமகேஷ்வரி தலைமையிலான போலீசார் சாமிநாதனை தேடினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசாரின் தீவிர தேடுதலில் சிக்கிய சாமிநாதன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த அவரை சிறையில் அடைத்தனர்.

தரமணி சிறுமி

சென்னை, தரமணி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியுடன் அதே பகுதியை சேர்ந்த 17 வயதாகும் ஐ.டி.ஐ படிக்கும் மாணவன் காதல் வலை வீசியுள்ளார். பின்னர் சிறுமிக்கு மாணவன் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளான்.

மாணவனின் தொல்லையை தாங்க முடியாத சிறுமி, வீட்டில் பிரச்னையை கூறியுள்ளார். அதனால் சிறுமியின் தாய், தைரியமாக கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார், மாணவனிடம் விசாரித்து அவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கெல்லீஸ் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.

அயனாவரம் சிறுமி

வில்லிவாக்கம், தரமணி சிறுமிகளுக்கு நடந்த கொடுமைகளை விட சென்னை அயனாவரம் சிறுமிக்கு நடந்த கொடுமைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 15 வயது அயனாவரத்தைச் சேர்ந்த சிறுமியின் அம்மா மன நல பாதிக்கப்பட்டவர். அதனால் பாட்டியில் அரவணைப்பில் அந்தச் சிறுமி இருந்தார். கடந்த மார்ச் மாதத்தில் சிறுமிக்கும் பாட்டிக்கும் பிரச்சினை ஏற்பட கோபத்தில் வீட்டை விட்டு வந்துவிட்டாள்.

சிறுமியை பல இடங்களில் தேடிய பாட்டியும் திரும்ப வந்துவிடுவாள் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால் அவள் மாதக்கணக்கில் வீடு திரும்பவில்லை. இந்தச் சூழலில் கால்போன போக்கில் நடந்த சிறுமி, இறுதியாக பெரம்பூர் ரயில் நிலையத்தை வந்தடைந்தார். பிளாட்பாரத்தில் சுற்றித் திரிந்த சிறுமியை திருத்தணியைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற இளைஞர் பார்த்துள்ளார்.

ஆசைவார்த்தை

சிறுமியை நீண்ட நேரமாக கவனித்த வெங்கடேசன், அவளிடம் பேச்சுக் கொடுத்தார். அப்போதுதான் சிறுமி வீட்டை விட்டு ஓடி வந்த விவரம் வெங்கடேசனுக்கு தெரிந்தது. அதனால் என்னுடன் திருத்தணிக்கு வருகிறாயா, அங்கு உனக்கு வேண்டியதெல்லாம் நான் வாங்கித் தருகிறேன் என்று ஆசை வார்த்தையைக் கூறியுள்ளார் வெங்கடேசன்.

அதை உண்மையென நம்பிய சிறுமியும் ரயில் மூலம் திருத்தணிக்குச் சென்றார். ரயிலில் செல்லும் போது நடந்துக் கொண்ட வெங்கடேசன், வீட்டுக்கு சென்றதும் அவனின் மூளை மிருகமானது. அறைக்குள் சிறுமியை அடைத்துவிட்டு அவளுக்கு தினந்தோறும் பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியுள்ளார். வேறுவழியில்லாமல் சிறுமியும் அந்தத் தொல்லைகளை சமாளித்துவந்துள்ளார். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த பாலியல் தொல்லை தொடர்ந்துள்ளது.

திருத்தணி ரயில் நிலையம்

இந்தச் சமயத்தில்தான் வெங்கடேசன் வேலைக்காக ஆந்திரா செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது சிறுமியை ஆந்திராவுக்கு அழைத்துச் செல்ல முடியாது. அதே நேரத்தில் வீட்டிலும் தனியாக வைத்திருக்க முடியாது என்பதால் தனக்கு தெரிந்த மேஸ்திரி ஒருவரிடம் சிறுமியை விட்டுவிட்டு சென்றுள்ளார் வெங்கடேசன். மேஸ்திரி வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி, திருத்தணி ரயில் நிலையத்துக்கு ஜூலை 6-ம் தேதி வந்துள்ளார்.

ஊரடங்கு என்பதால் திருத்தணி ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் சிறுமி மட்டும் ரயில்நிலையத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்துக் கொண்டிருந்தாள். இந்தத் தடவை சிறுமியைக் கவனித்த ரயில்வே போலீசார், அவளிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி, கண்ணீர்மல்க தனக்கு நடந்த கொடுமைகளைக் கூறியதோடு அயனாவரத்துக்கு செல்ல வேண்டும் அம்மா, பாட்டியை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

போக்சோ சட்டம்

போக்குவரத்து வசதியில்லாததால் திருத்தணி ரயில்வே போலீசார், அயனாவரம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு சிறுமி குறித்த விவரத்தை தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன், அயனாவரம் காவல் நிலையத்திலிருந்து ஜெயந்தி என்ற பெண் காவலரையும் துணைக்கு இன்னொரு காவலரையும் திருத்தணிக்கு அனுப்பி வைத்தனர். திருத்தணி சென்ற காவலர்கள் சிறுமியை மீட்டு சென்னை அயனாவரத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு சிறுமியிடம் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்களை கேட்ட போலீசார், தலைமை செயலக காலனி அனைத்து மகளிர் போலீசாரிடம் சிறுமியை ஒப்படைத்தனர். அதே நேரத்தில் சிறுமியின் பாட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற வெங்கடேசன் அவளிடம் தவறாக நடந்துக் கொண்ட குற்றத்துக்காக போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. வெங்கடேசனை போலீசார் தேடிவருகின்றனர்.

தாம்பரம் குழந்தை

கடந்த 2 நாள்களுக்கு முன், சென்னை கிழக்கு தாம்பரம், காந்தி நகரை சேர்ந்த கூலி தொழிலாளியின் 5 வயது பெண் குழந்தையை, அதே பகுதியை சேர்ந்த உதயகுமார்(30) கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் சிறுமி நடந்தச் சம்பவத்தைக் தன்னுடைய அம்மாவிடம் கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் அம்மா தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து உதயகுமார் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் குறைய காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஊரடங்கில் அதிகரித்துள்ள குடும்ப வன்முறைகள் மாற வேண்டும். அப்போதுதான் சுதந்திரமாக பெண்கள், குழந்தைகள் வாழ முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *