ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை சேர்ந்த காமாலேயா இன்ஸ்டிடியூட் நிறுவனம் கொரோனாவுக்கு புதிய மருந்தை கண்டுபிடித்து மனிதர்களிடம் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஸ்புட்னிக் வி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை வர்த்தகரீதியாக விற்பனை செய்ய ரஷ்ய சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளியிட்டுள்ளார். “உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. இந்த மருந்தை எனது மகளுக்கே கொடுத்துள்ளேன். அவர் பூரண குணமடைந்துவிட்டார்” என்று அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மகள் என்ற பெயரில் ஒரு பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சிவப்பு நிற டி சர்ட், புளு நிற கால்சட்டை அணிந்துள்ள அந்த பெண்ணுக்கு மருத்துவர் தடுப்பூசி செலுத்துகிறார். அவர்தான் அதிபர் புடினின் மகள் என்று சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில் அவர், விளாடிமின் புடினின் மகள் கிடையாது. அவர் ஒரு தன்னார்வலர். அவரது பெயர் விவரத்தை ரஷ்ய அரசு வெளியிடவில்லை.
ரஷ்ய அதிபரின் திருமண வாழ்க்கை மர்மம் நிறைந்தது. அவரது முதல் மனைவி லூத்மினா.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் மரியா (வயது 35). ஒரு நிறுவனத்தின் சிஇஓவாக செயல்படுகிறார். இளைய மகள் கேத்ரினா (வயது 33). இவர் அக்ரோபடிக் நடன கலைஞர் ஆவார். இரு மகள்களில் கேத்ரினாவே கொரோனா மருந்தை எடுத்துக் கொண்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
