உத்தராகண்ட் மாநிலத்தின் உதம்சிங் மாவட்டம், ருத்ராபூர் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கில் பின்னால் அவரது நண்பர் அமர்ந்திருந்தார்.
ஓர் இடத்தில் போலீஸார் பைக்கை நிறுத்தினர். அப்போது 2 இளைஞர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த போலீஸ்காரர் ஒருவர் பைக் சாவியை எடுத்து இளைஞரின் நெற்றியில் ஓங்கி குத்தினார்.
இதில் அந்த சாவி, இளைஞரின் முன்நெற்றியில் குத்தி உள்ளே சொருகியது. அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. நடந்த சம்பவத்தை அந்த இளைஞர் விவரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சட்டம், ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது போலீஸாரின் கடமை என்றாலும் கொஞ்சம் கனிவாக நடந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். சில போலீஸாரின் கோபத்தால், அராஜகத்தால் ஒட்டுமொத்த போலீஸ் துறைக்கும் பெரும் தலைக்குனிவு ஏற்படுகிறது.
போலீஸ் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற குரல் உத்தராகண்ட் மலைகளில் எதிரொலிக்கிறது.