எஸ்.பி.பி.க்கு கொரோனா பரப்பியது யார்?

திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பி.க்கு கொரோனாவை பரப்பியவர் பாடகி மாளவிகாவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு பாடகி மாளவிகா விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 5-ம் தேதி சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சேர்ந்த 2 வது நாளில், நலமாக இருப்பதாக அவர் வீடியோ வெளியிட்டார். ஆனால் அதன்பிறகு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

வெளிநாட்டு டாக்டர்கள்

கடந்த 14-ம் தேதி அவரது உடல்நிலை மோசமானது. உயிர் காக்கும் கருவிகளுடன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி.பி. உடன் பாடகி மாளவிகா
எஸ்.பி.பி. உடன் பாடகி மாளவிகா

வெளிநாட்டு டாக்டர்களின் ஆலோசனைப்படி எஸ்.பி.பி.க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.பி. விரைவில் குணமடைய நாடு முழுவதும் பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

லட்சக்கணக்கான ரசிகர்கள் வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நடிகர்கள் ரஜினி, கமல் உட்பட பல்வேறு பிரபலங்கள், எஸ்பிபி குணமடைய நேற்று மாலை 6 மணிக்கு ஆன்லைன் வாயிலாக கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.

இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டு பிரார்த்தனையில் பங்கேற்ற அனைவருக்கும் எஸ்பிபி மகன் எஸ்.பி. சரண் வீடியோ வாயிலாக நன்றி தெரிவித்தார்.

பாடகி மாளவிகா

இதற்கிடையில் எஸ்.பி.பி.க்கு கொரோனா வைரஸை பரப்பியவர் தெலுங்கு திரைப்பட பின்னணி பாடகி மாளவிகா என்ற தகவல் ஆந்திர சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. டிவி ஷோ ஒன்றில் எஸ்.பி.பி. உடன் மாளவிகா பங்கேற்றார்.

பாடகி மாளவிகா
பாடகி மாளவிகா

அப்போது மாளவிகா மூலம் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என்று வாட்ஸ் அப் தகவலில் குறிப்பிடப்பட்டுள்லது.
இந்த குற்றச்சாட்டுக்கு பாடகி மாளவிகா பேஸ்புக் வாயிலாக விளக்கம் அளித்துள்ளார்.

“வாட்ஸ் அப்பில் ஒரு பொய்யான தகவல் பரவி வருகிறது. டி.வி. ஷோவுக்கு முன்பாக எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும் அதை மறைத்து டிவி. ஷோவில் நானும் எனது தங்கையும் பங்கேற்றதாகவும் என் மூலமாக எஸ்.பி.பி.க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

உண்மை என்னவென்றால், எஸ்.பி.பி. பங்கேற்ற டி.வி. ஷோ சூட்டிங் கடந்த ஜூலை 30-ம் தேதி நடைபெற்றது.

இதில் ஹேமசந்திரா, அனுதீப், பிரணவி, லிப்சிகா உள்ளிட்ட பாடகர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற சூட்டிங்கில் காருண்யா, தாமினி, சத்ய யாமினி, வாச பாவினி, நான் பங்கேற்றேன்.

பாடகி மாளவிகா
பாடகி மாளவிகா

அப்போது எனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால் என்னுடன் பங்கேற்ற மற்ற 3 பாடகிகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும். எனது தங்கை பாடகி கிடையாது. அவர் அமெரிக்காவில் வசிக்கிறார்.

கொரோனா பாதுகாப்பு

எனது கணவர் வீட்டில் இருந்து பணியாற்றுகிறார். எனது வயதான பெற்றோர் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. கடந்த 5 மாதங்களாக நானும் வீட்டிலேயே இருக்கிறேன். எனக்கு 2 வயது மகள் உள்ளார்.

எஸ்பிபி டிவி ஷோவில்தான் முதல் முறையாக பங்கேற்றேன். எனது காரில் எனக்கும் டிரைவருக்கும் இடையே தடுப்பை அமைத்துள்ளேன். எனவே டிரைவர் மூலமாக எனக்கு தொற்று ஏற்பட வாய்ப்பில்லை.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி என் மூலமாக எஸ்.பி.பி. சாருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எஸ்.பி.பி சாருக்கு தொற்று ஏற்பட்ட பிறகே எனக்கு தொற்று ஏற்பட்டது. கடந்த 8-ம் தேதிதான் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சைபர் கிரைமில் புகார்

எனது தந்தை, தாய், 2 வயது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது கணவருக்கும் டிரைவருக்கும் வைரஸ் தொற்று இல்லை.
நானும் எனது குடும்பமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம்.

நாங்கள் கஷ்டமான காலத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில் வாட்ஸ் அப்பில் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளேன்” என்று பாடகி மாளவிகா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *