சிவகங்கையில் மாமியார் மருமகள் கொலை; உயிர் தப்பிய குழந்தை – நாட்டை காப்பாற்றிய குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் சந்தியாகு (65). முன்னாள் ராணுவ வீரர். அவருடைய மனைவி ராஜகுமாரி (60). இந்தத் தம்பதியினருக்கு 2 மகன்கள். மூத்த மகன் ஸ்டீபன் (38), 2-வது மகன் ஜேம்ஸ்ராஜ். இவர்கள் இருவரும் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.

லடாக் எல்லையில்…

கடந்த ஓராண்டாக ஸ்டீபன் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருடைய மனைவி சினேகா (30). இவர்களுக்கு சோயல்லா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது.
சினேகாவின் பெற்றோர் வீடு சென்னையில் உள்ளது.

கணவர் ராணுவத்தில் இருப்பதால் சினேகா குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் தனது தாயார் மற்றும் குழந்தையுடன், அவரது பூர்வீக ஊரான இளையான்குடி அருகே கோட்டையூர் கிராமத்துக்கு வந்து ஒரு மாதமாக தங்கியிருந்தார்.

தோட்டத்தில் சந்தியாகு

இந்தநிலையில் சினேகா தனது மாமியாருடன் வசிக்க முடுக்கூரணி கிராமத்துக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைக்குழந்தையுடன் வந்தார். சம்பவத்தன்று சினேகா, அவருடைய குழந்தை மற்றும் மாமியார் ராஜகுமாரி ஆகியோர் வீட்டில் தூங்கினர். சந்தியாகு, தோட்டத்துக்கு இரவு காவல் பணிக்கு சென்றிருந்தார்.

வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்தனர். அந்த சத்தம் கேட்டு, வீட்டின் முகப்பு பகுதியில் படுத்திருந்த ராஜகுமாரி எழுந்தார். உடனே கொள்ளையர்கள், அவரது தலையில் இரும்பு கம்பியால் பலமாக அடித்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் விழுந்த ராஜகுமாரி சற்று நேரத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த சினேகாவின் தலையிலும் இரும்பு கம்பியால் தாக்கி, அவரையும் கொலை செய்தனர். இந்த சம்பவத்தில், குழந்தை மட்டும் உயிர் தப்பியது.

சடலமாக சினேகா

நகைகள் கொள்ளை

பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ராஜகுமாரி கழுத்தில் அணிந்து இருந்த 8 பவுன் நகை, மருமகள் சினேகா அணிந்து இருந்த 7 பவுன் நகை, தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் கழுத்தில் இருந்த 1½ பவுன் தங்கச்சங்கிலி மற்றும் குழந்தையின் காலில் இருந்த கொலுசு ஆகியவற்றை அந்த மர்ம கும்பல் கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

அதிகாலை 5 மணி அளவில் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது அங்கு மாமியார் ராஜகுமாரி மற்றும் மருமகள் சினேகா ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து காளையார்கோவில் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் இளவரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர்.

தனிப்படைகள்

போலீஸ் டி.ஜ.ஜி. மயில்வாகனன், சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுஎஸ்.பி(பொறுப்பு) வருண்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சம்பவம் தொடர்பாக காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை போலீஸ் எஸ்.பி (பொறுப்பு) வருண்குமார்,
காளையார்கோவில் அருகே மாமியார், மருமகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் சிக்குவார்கள் என்றார்.

கடை திருட்டு

இந்த இரட்டைக்கொலைக்கு முன்பாக காளையார்கோவில் அருகே மறவமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கடையில் திருட்டு நடைபெற்றுள்ளது. எனவே அந்த கடையில் திருடியவர்களுக்கு, இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சினேகாவின் கணவரான ராணுவ வீரர் ஸ்டீபனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்தவுடன் சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாமியார், மருமகள் உடல்களை ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *