உத்தர பிரதேசம் மிர்ஸாபூரை சேர்ந்தவர் லவ்வேஷ் குமார். எலெக்ட்ரீசனான இவர் சில நாள்களுக்கு முன்பு அங்குள்ள அங்கன்வாடியில் வேலை செய்தார். அவரும் சக தொழிலாளர்களும் அந்த அங்கன்வாடி கட்டிடத்திலேயே இரவில் தூங்கினர்.
அப்போது அறைக்குள் புகுந்த ஒரு பாம்பு, லவ்வேஷ்குமாரின் ஜீன்ஸ் பேன்ட்டுக்குள் புகுந்துவிட்டது. நள்ளிரவில் காலில் ஏதோ ஊர்வதை உணர்ந்த லவ்வேஷ் அலறியடித்து எழுப்பினார்.
தகவல் அறிந்த உள்ளூரை சேர்ந்த பாம்பு பிடிக்கும் இளைஞர் ஓடோடி வந்தார்.
தனது சமார்த்தியத்தையும் பாம்பு பிடிக்கும் நிபுணத்துவத்தையும் அந்த இளைஞர் பயன்படுத்தினார்.
ஒரு தூணில் லவ்வேஷ் குமாரை நிற்க வைத்து, அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் லாவகமாக கிழித்து பாம்பை பிடித்தார். சுமார் 7 மணி நேர வாழ்வா, சாவா போராட்டத்துக்குப் பிறகு லவ்வேஷ் உயிர் தப்பினார்.
ஜீன்ஸுக்குள் புகுந்தது நல்ல பாம்பு என்பது தெரியவந்தது. நல்லவேளையாக அந்த பாம்பு அவரை தீண்டவில்லை. லவ்வேஷ் குமாரும் பாம்பும் நலமாக உள்ளனர். முன்னெச்சரிக்கையாக ஒரு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அவசியம் இல்லாமல் போனது.
லவ்வேஷ் குமாரின் ஜீன்ஸில் இருந்து பாம்பு பிடிக்கும் வீடியோ இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பரவி வருகிறது.