மதுரை: திருமணத்துக்கு முந்தின நாளில் மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை – சோகத்தில் மூழ்கிய திருமண வீடு

மதுரை மாவட்டத்தில் திருமணத்துக்கு முந்தின நாள் மணமகனை அவரின் தந்தை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சொத்து தகராறு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள அய்யன கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் இளங்கோவன். கூலித்தொழிலாளி. இவரின் மகன் பிரதீப். 20 வயதாகும் இவனும் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தான். இளங்கோவனுக்கும் பிரதீப்பிற்கும் சொத்து தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் தனது உறவுக்கார 17 வயது சிறுமியை பிரதீப் காதலித்து வந்திருக்கிறான். பின்னர் சிறுமியை அவன் திருமணம் செய்திருக்கிறான். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணம்

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த பிரதீப், தற்போது சிறுமிக்கு 18 வயது கடந்துள்ளதால் அவளை உறவினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தான். இதற்கான ஏற்பாடுகள் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை திருமணம் என முடிவு செய்யப்பட்டது. திருமணத்துக்கு முந்தின நாளான சனிக்கிழமை நண்பர்களுக்கு மது விருந்து கொடுக்க பிரதீப், தன்னுடைய அப்பா இளங்கோவனிடம் பணம் கேட்டிருக்கிறான்.

அப்போது இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. போதையில் இருந்த இளங்கோவன், அருகில் கிடந்த கோடாரியால் மகன் பிரதீப்பை தாக்கியிருக்கிறார். இதில் பிரதீப்பின் கழுத்தில் வெட்டு விழுந்து அவன் ரத்த வெள்ளத்தில் சரிந்தான். அதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பிரதீப்பை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பிரதீப்பை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

மகனைக் கொலை செய்த தந்தை இளங்கோவன்
மகன் பிரதீப்பைக் கொலை செய்த தந்தை இளங்கோவன்

கொலை

மகனைக் கொலை செய்த இளங்கோவன், வாடிப்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்று சரண் அடைந்தார். இதையடுத்து பிரதீப்பின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனைக் கொலை செய்த குற்றத்துக்காக இளங்கோவனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மணக்கோலத்தில் பார்க்க வேண்டிய பிரதீப்பை பிணக்கோலத்தில் பார்த்தவர்கள் சோகத்தில் மூழ்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *