உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சோனியா காந்தி (73) விலகினார். அப்போது சிகிச்சைக்காக அவர் அடிக்கடி அமெரிக்கா சென்று சென்று வந்தார்.
காங்கிரஸின் புதிய தலைவராக அவரது மகன் ராகுல் காந்தி பதவியேற்றார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி பதவியில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2019 ஆகஸ்டில் காங்கிரஸின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி மீண்டும் பதவியேற்றார். கடந்த பிப்ரவரியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து அவர் வீடு திரும்பினார்.
இன்று காலை காங்கிரஸின் ராஜ்யசபா எம்.பி.க்களுடன் சோனியா காந்தி ஆன்லைனில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை சுமார் 3 மணி நேரம் வரை நீடித்தது. நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் சோனியாவுக்கு இன்று இரவு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இரவு 7 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். இதய, நுரையீரல் நிபுணர் அரூப் குமார் பாசு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.சோனியா காந்திக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் டி.எஸ். ராணா தெரிவித்துள்ளார்.