ஆந்திராவின் வாரங்கல் பகுதியை சேர்ந்தவர் சாரதா. சாப்ட்வேர் இன்ஜினீயரான இவர், ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கொரோனா வைரஸை காரணம் காட்டி அவரது நிறுவனம் அவரை கழட்டிவிட்டது.
மனம் தளராத சாரதா ஹைதராபாத்தின் ஸ்ரீநகர் காலனி நடைபாதையில் கடை விரித்தார். காலை 4 மணிக்கே எழும்பி மொத்த காய்கனி சந்தைக்கு சென்று காய்கறிகளை வாங்கி வந்து காலை 6 மணிக்கு வியாபாரத்தை தொடங்குவார். கத்தரிக்கா வாங்குங்க, வெண்டைக்காய் வெரைட்டியா இருக்கு என்று இரவு வரை கூவி கூவி காய்கறிகளை விற்று வருகிறார்.

அவரது குரல் சமூக வலைதளங்கள் வாயிலாக நடிகர் சோனி சூட்டை எட்டியது. சாரதாவின் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்பை அவர் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து சோனுசூட் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது அலுவலக அதிகாரிகள், சாரதாவை சந்தித்துப் பேசினர். அவரது வேலைக்கான ஆர்டரை வழங்கிவிட்டோம். ஜெய் ஹிந்த்” என்று பதிவிட்டுள்ளார்.
புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப லட்சம், லட்சமாக செலவு செய்த சோனு சூட் இப்போது அவர்களின் வேலைவாய்ப்புக்காக www.pravasirojgar.com என்ற இணையதளத்தை தொடங்கி வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை திரையில் வில்லனாக தோன்றி மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர் சோனி சூட். ஆனால் உண்மையில் அவர் ஒரு ஹீரோ என்பதை மக்கள் இப்போது உணர்ந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவில் பேரும் புகழும் பெற்ற எத்தனையோ நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான சொத்துகளை குவித்து வைத்திருக்கின்றனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்ட பெரும் படையை வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் எல்லாம் களத்தில் இறங்கினால் கொரோனாவை தூக்கிப் போட்டு மிதிக்கலாம். வறுமையை விரட்டி, விரட்டி வெளுக்கலாம். களம் இறங்குவார்களா நமது ஹீரோக்கள்…