கொரோனா தேசமாகிறதா தென்னிந்தியா ?

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், கொரோனாவையும் வாழ வைத்து கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவுக்கு அடுத்து வைரஸ் பாதிப்பு மிகுந்த மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேரை வைரஸ் தொற்றுகிறது. தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்று 7 ஆயிரத்தை நெருங்கியது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 6,737 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவின் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் செயல்படும் கொரோனா வார்டு.
கேரளாவின் திருச்சூரில் உள்ள அரசு மருத்துவமனையில் செயல்படும் கொரோனா வார்டு.


அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் வைரஸ் பரவல் வேகமெடுத்திருக்கிறது. அந்த மாநிலத்தில் இதுவரை 90 ஆயிரத்து 942 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் புதிதாக 5 ஆயிரம் பேரை கொரோனா தொற்றுகிறது. வைரஸ் அச்சுறுத்தலால் தலைநகர் பெங்களூரில் வசிக்கும் மக்கள் நகரை காலிசெய்துவிட்டு சொந்த கிராமங்களுக்கு தப்பி ஓடுகின்றனர்.


மற்றொரு அண்டை மாநிலமான ஆந்திராவிலும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. அந்த மாநிலத்தில் இதுவரை 88 ஆயிரத்து 671 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய வைரஸ் தொற்று சில நாட்கள் அதிகமாகவும் சில நாட்கள் குறைவாகவும் உள்ளன.

ஆந்திராவின் விஜயவாடா மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
ஆந்திராவின் விஜயவாடா மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்.


வைரஸை கட்டுப்படுத்தியதில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் கேரளா முன்னுதாரணமாக திகழ்வதாக ஒரு காலத்தில் போற்றி புகழப்பட்டது. ஆனால் அந்த மாநிலத்தின் நிலைமையும் மோசமாகி வருகிறது. கேரளாவில் கடந்த ஒரு வாரமாக வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தொட்டும், தாண்டியும் வருகிறது. அங்கு நேற்று ஆயிரத்து 103 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் இதுவரை 18 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தெலங்கானாவில் இதுவரை 52 ஆயிரத்து 466 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தலைநகர் ஹைதராபாத்தில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.
தேசிய அளவிலான கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்திலும், கர்நாடகா 4-வது இடத்திலும், ஆந்திரா 5-வது இடத்திலும், தெலங்கானா 9-வது இடத்திலும் உள்ளன. கேரளா சற்று தள்ளி 16-வது இடத்தில் இருக்கிறது.


வடமாநிலங்களில் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மேற்குவங்கத்தில் மட்டுமே கொரோனா கட்டுக்கடங்காமல் உள்ளது. டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் வைரஸ் பரவல் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் டெல்லி அபார முன்னேற்றம் அடைந்துள்ளது.
மருத்துவ கட்டமைப்பு மிக வலுவாக உள்ள தென்னிந்தியா, கொரோனா தேசமாகி மாறி வருவது கவலையளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *