எஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

எஸ்.பி.பி. உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி லேசான காய்ச்சல், சளி தொல்லை காரணமாக சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது நலமாக இருப்பதாக அவர் வீடியோ வெளியிட்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமானது.

இந்த மாத தொடக்கத்தில் அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தார். எஸ்.பி.பி. உடல்நலம் தேறிவருவதாகவும் அவர் வீடு திரும்ப விரும்புவதாகவும் எஸ்.பி.பி. மகன் எஸ்.பி.சரண் வீடியோ மூலம் அண்மையில் தகவல் தெரிவித்தார்.

ஆனால் நுரையீரல் பாதிப்பில் இருந்து எஸ்.பி.பி.யால் மீள முடியவில்லை. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. திடீரென அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.

சிகிச்சை பலனின்றி கடந்த 25-ம் தேதி எஸ்.பி.பி. காலமானார்.
இதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்பின் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அரசு மரியாதையுடன் இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மறைந்த எஸ்.பி.பி.க்கு சாவித்ரி என்ற மனைவியும் பல்லவி என்ற மகளும் எஸ்.பி.சரண் என்ற மகனும் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *