பள்ளிகள் திறப்பு தொடர்பாக நவ. 9-ல் கருத்து கேட்பு கூட்டம்

பள்ளிகள் திறப்பு தொடர்பாக நவ. 9-ல் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் 2-வது அலை அச்சுறுத்தல் காரணமாக பள்ளி, கல்லூரி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள், பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர். இதன்பின் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்.

“9, 10, 11, 12-ம் வகுப்புகளை வரும் 16-ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் சில கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. எனவே பள்ளிகள் திறப்பு தொடர்பாக மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் வரும் 9-ம் தேதி காலை 10 மணிக்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவ, மாணவியரின் பெற்றோர் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். கூட்டத்தில் பங்கேற்க இயலாதவர்கள் கடிதம் மூலம் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளை திறப்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்” என்று தீரஜ்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *