கடந்த 2005 முதல் 2015 வரை இலங்கை அதிபராக மஹிந்த ராஜபக்ச பதவி வகித்தார். அப்போது அவரது தம்பி கோத்தபய ராஜபக்ச பாதுகாப்புத் துறை செயலாளராகவும் மற்றொரு தம்பி சாமல் ராஜபக்ச நாடாளுன்ற அவைத் தலைவராகவும் இளைய தம்பி பசில் ராஜபக்ச பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றினர்.
கடந்த 2015 அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்ரிபால சிறிசேனா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின் மஹிந்த ராஜபக்சவின் சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து அவர் முழுமையாக ஓரம் கட்டப்பட்டார். அந்த கட்சி சிறிசேனாவின் வசமானது.
கடந்த 2016 நவம்பரில் மஹிந்த ராஜபக்ச தரப்பில் ‘இலங்கை பொதுஜன பெரமுன’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டது. கடந்த 2018 பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் புதிய கட்சி அபார வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து கடந்த 2019 இறுதியில் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றார்.
இதைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார். இடைக்கால பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடாளுமன்ற தேர்தல் தொடர்ந்து தள்ளிப்போனது.

இறுதியில் கடந்த 5-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதான எதிர்க்கட்சியான ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியில் பிளவு ஏற்பட்டது. அந்த கட்சியின் மூத்த தலைவர் சஜித் பிரேமதாசா தனியாக பிரிந்து சென்று ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கினார்.
நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்ச சகோதரர்களின் இலங்கை பொதுஜன பெரமுனவுக்கும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின.
இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 இடங்கள் உள்ளன. இதில் 196 இடங்களுக்கு நேரடி தேர்தல் நடைபெற்றது.

மீதமுள்ள 29 இடங்கள், கட்சிகள் பெறும் வாக்குகள் அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன.
நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் ராஜபக்ச சகோதரர்களின் இலங்கை பொதுஜன பெரமுன 128 இடங்களைக் கைப்பற்றியது. அத்துடன் அந்த கட்சி பெற்ற 59 சதவீத வாக்குகளின் அடிப்படையில் 17 இடங்கள் கூடுதலாக கிடைத்தன. இதன்படி இலங்கை பொதுஜன பெரமுன 145 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.
சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் கட்சி 47 தொகுதிகளையும் அந்த கட்சி பெற்ற 23.9 சதவீத வாக்குகளின் அடிப்படையில் கூடுதலாக 7 இடங்களும் கிடைத்துள்ளன. ஒட்டுமொத்தமாக அந்த கட்சி 55 இடங்களைப் பெற்றுள்ளது.
ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி ஓரிடத்தில்கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது.

எனினும் அந்த கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் நியமன ஒதுக்கீட்டில் ஓர் இடம் கிடைத்துள்ளது. அந்த ஓரிடத்தில் ரணில் எம்.பி.யாகி நாடாளுமன்றத்துக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த பல்வேறு கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக தனித்தனியாகப் பிரிந்து சென்றன.
எனினும் அந்த கூட்டமைப்பை சேர்ந்த இலங்கை தமிழ் அரசு கட்சி 9 இடங்களைப் கைப்பற்றியது. அந்த கட்சி பெற்ற 2.82 சதவீத வாக்குகளின் அடிப்படையில் கூடுதலாக ஓர் இடம் கிடைத்தது.
இலங்கை தமிழ் அரசு கட்சி உட்பட பல்வேறு கட்சிகளின் சார்பில் 25 தமிழர்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை நாடாளுமன்ற விதிகளின்படி 150 எம்.பி.க்களை பெற்றிருக்கும் கட்சியே ஆட்சியமைக்க முடியும். ராஜபக்ச சகோதரர்களின் இலங்கை பொதுஜென பெரமுனவிடம் 145 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். எனவே சிறிய கட்சிகளுடன் இணைந்து அந்த கட்சி புதிய அரசை அமைக்கிறது.
டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஐனநாயக கட்சி (2 எம்.பிக்கள்), பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (ஒரு எம்.பி.), ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஒரு எம்.பி.), அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் (ஒரு எம்.பி.), அத்துரலியே ரதன தேரர் தலைமையிலான மக்கள் கச்தி கட்சி (ஒரு எம்.பி.) ராஜபக்ச சகோதரர்களுடன் கைகோக்க உள்ளனர்.
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச மீண்டும் பதவியேற்கிறார்.
பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருக்கும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் கட்சி எம்.பி.க்கள் சிலர், ராஜபக்ச அணிக்கு தாவக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.