பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தேடப்பட்ட சென்னை கேளம்பாக்கம் டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா-வை டெல்லியில் சிபிசிஐடி போலீஸார் பிடித்த ருசிகர தகவல் வெளியாகியிருக்கிறது. அதுதொடர்பான செய்திவை விரிவாகப் பார்ப்போம்.
சிவசங்கர் பாபா
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரன். இவர் சிறுவயது முதலலே ஆன்மீகத்தில் அதிக பக்திக் கொண்டவர். படிப்பை முடித்து விட்டு வேலைத் தேடி சென்னை வந்த சிவசங்கரனுக்கு லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலைச் செய்தார்.
பிறகு சரக்கு புக்கிங் ஏஜென்ஸி வைத்து நடத்தி வந்தார். வேதியியல் துறையில் முதுகலைப்படித்த சிவசங்கரன், சரக்கு போக்குவரத்து துறை தொடர்பான படிப்பையும் கற்றார்.

வேலையோடு ஆன்மீக பயணத்தையும் அவர் மேற்கொண்டார். சபரி மலைக்கு ஆண்டுந்தோறும் சென்று வந்தார். ஐயப்ப பக்தரான சிவசங்கரன், தன்னுடைய பங்களாவில் ஐயப்ப சிலையை வைத்து பூஜை செய்து வந்தார்.
வடசென்னையிலிருந்து தென்சென்னைக்கு இடம்பெயர்ந்த சிவசங்கரன், கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கத்தில் ஆசிரமம் ஒன்றை நிறுவினார்.
ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபலமான பாபா கோயிலுக்கு சென்று வந்த சிவசங்கரன், தன்னுடைய பெயரை சிவசங்கர் பாபா என மாற்றிக் கொண்டார்.
கொட்டிவாக்கம் ஆசிரமத்துக்கு பக்தர்கள் வருகை அதிகரித்தது. அப்போது கர்நாடக இசையில் கையை உயர்த்தியபடி டான்ஸ் ஆடுவதை சிவசங்கர் பாபா வழக்கமாக வைத்திருந்தார். அதனால் அவரை டான்ஸ் சாமியார் என பிரபலமானார்.

இந்தச் சூழலில்தான் 20 ஆண்டுகளுக்கு முன் தனியார் தொலைக்காட்சியில் நடந்த ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவசங்கரனுக்கும் இன்னொரு சாமியாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ராமராஜ்ஜியம்
இதையடுத்து டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு ஏற்பட்ட சிக்கல் காரணமாக கொட்டிவாக்கம் ஆசிரமத்தை மூடிவிட்டு பக்தர் சுஷில் என்பவர் கேளம்பாக்கத்தில் உள்ள 64 ஏக்கர் நிலத்தை சிவங்கர்பாபாவுக்கு நன்கொடையாக கொடுத்தார்.
அங்கு ராமராஜ்யம் என்ற பெயரில் ஆசிரமம், சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி, சர்ச், மசூதி என கட்டிய சிவசங்கர் பாபா, இயற்கை சூழலுடன் கூடிய கல்வி, ஆன்மீகத்தை போதித்து வந்தார்.
20 ஆண்டுகளைக் கடந்த சூழலில் ராமராஜ்ஜியம் ஆசிரமத்துக்குள் 300-க்கு மேற்பட்ட பக்தர்கள் குடியிருந்து வருகின்றனர்.
இடம் ஆக்கிரமிப்பு, மாணவிகளுக்கு பாலியல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய சிவசங்கர்பாபா, தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி நடவடிக்கைகளிலிருந்து தப்பி வந்தார்.
பாலியல் குற்றச்சாட்டு
இந்தச் சமயத்தில்தான் கே.கே.நகர் தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கூறி அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதன்பேரில் போலீஸார், ராஜகோபாலனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் புகார்களாகின.
அதில் அண்ணாநகர் ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜ், மத்திய அரசு அதிகாரியும் தடகள பயிற்சியாளர் நாகராஜன், தனியார் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா நடத்தி வந்த பள்ளி மாணவிகளும் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகாரைக் கொடுத்தனர்.
அதன்பேரில் டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்களும் சேர்க்கப்பட்டனர்.
கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி மீதான குற்றச்சாட்டுக்களை மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையம் விசாரித்தது.

அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரானவர்கள், சிவசங்கர்பாபாவுக்கு உடல் நலம் சரியில்லை.
பக்தர்
அதனால் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என மருத்துவ சான்றிதழ்களையும் ஆணையத்திடம் சமர்பித்தனர்.
இந்தச் சமயத்தில்தான் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போடப்பட்ட சிவசங்கர் பாபா மீதான வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி குணவர்மன், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கரை நியமித்து சிபிசிஐடி டிஜிபி ஷகில்அக்தர் உத்தரவிட்டார்.
13-ம் தேதி வழக்கு சிபிசிஐடி மாறியதும் சிவசங்கர்பாபா எங்கு இருக்கிறார் என்ற விவரத்தை சிபிசிஐடி போலீஸார் சேகரித்தனர்.
டேராடூனுக்கு டி.எஸ்.பி குணவர்மன் தலைமையிலான போலீஸார் விமானம் மூலம் புறப்பட்டனர்.
மருத்துவமனைக்குச் சென்று சிவசங்கரன் பாபா குறித்து விசாரித்தபோது அவர் டிஸ்சார்ஜாகி சென்று விட்டதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதை எதிர்பார்த்த சிபிசிஐடி போலீஸார் சிவசங்கர் பாபா தலைமறைவாக இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க புதிய திட்டத்தைப் போட்டனர். சிவசங்கர்பாபாவின் வடமாநில நட்பு வட்டார பக்தர்களின் விவரங்களைச் சேகரித்தனர்.

அப்போது பெருமாள் பெயரைக் கொண்ட பக்தர் ஒருவர், மருத்துவமனையில் சிவசங்கர் பாபாவைச் சந்தித்த ரகசிய தகவல் கிடைத்தது.
அந்தப் பக்தரின் செல்போன் நம்பரை பெற்ற சிபிசிஐடி போலீஸார், தங்களை சிவசங்கர் பாபாவின் தீவிர பக்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சாமி ஜியைச் சந்திக்க வந்திருப்பதாகக் கூறினர்.
அதற்கு சாமி ஜிக்கு உடல் நலம் சரியில்ல, அதனால் இப்போ பார்க்க முடியாது என அந்தப் பக்தர் பதிலளித்தார்.
உடனே பக்தரைப் போல பேசிய சிபிசிஐடி போலீஸார், சாமிஜியைச் சந்தித்து ஒரு முக்கிய தகவல் சொல்ல வேண்டும் என கூறினர்.
அதன்பிறகே டெல்லியில் டான்ஸ் சாமியார் சிவசங்கர்பாபா தங்கியிருக்கும் விடுதியின் விவரத்தை அவர் கூறினார். அந்த விடுதிக்கு பக்தர் வேடத்தில் சிபிசிஐடி போலீஸார் சென்றனர்.
அவர்களோடு டெல்லி போலீஸாருடன் சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான போலீஸார் அதிரடியாக நுழைந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் ஆடிப்போன சிவசங்கர்பாபா, தனக்கு ஹெல்த் சரியில்லை என்று நாடகமாடத் தொடங்கியிருக்கிறார்.
உடனே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் மூலம் சிவசங்கர் பாபாவின் உடல்நலம் பரிசோதிக்கப்பட்டது. அப்போது ஆஞ்சியோகிராம் செய்துக் கொண்ட சிவசங்கர்பாபா.

மொட்டை தலையில் இருந்தார். உடலைப் பரிசோதித்த டாக்டர்கள், சான்றிதழை அளித்ததும் டெல்லி போலீஸாரின் உதவியோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் நேற்றிரவு சிவசங்கர்பாபாவை சிபிசிஐடி போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சிவசங்கர்பாபாவின் பக்தர்களால் பிரச்னை ஏற்படக்கூடாது எனக்கருதிய சிபிசிஐடி போலீஸார் விமான நிலையத்தில் பாதுகாப்பை அதிகரித்திருந்தனர்.
சிரித்தப்படியே சிவசங்கர்பாபா
சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட சிவசங்கர்பாபாவிடம் விசாரணை அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுக்களைக் குறித்த கேள்விகளுக்கு சிரித்தப்படியே சிவசங்கர்பாபா பதிலளித்திருக்கிறார்.
அவரின் பதில்களை வீடியோவாக பதிவு செய்த போலீஸார், இன்று மருத்துவபரிசோதனைக்குப்பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிவசங்கர் பாபாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டிருக்கின்றனர்.
சிவசங்கர்பாபா சிறையில் அடைக்கப்பட்ட தகவல் ஆசிரமத்தில் உள்ள பக்தர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.