சென்னையில் வாக்கிங் செல்லும் இளம் பெண்களை குறி வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பிரபல ஸ்டார் ஹோட்டல் ஊழியர் தினேஷை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து 3 பைக்குகளைப் பறிமுதல் செய்தனர்.
சென்னை அண்ணா நகர் 2-வது பிரதான சாலையில், கடந்த 10-ம் தேதி காலை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது பைக்கில் வந்த ஒருவர், முன்னாள் ராணுவ வீரரின் மகள் அருகில் வந்து, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.

அதனால் அவர், அதிர்ச்சியடைந்ததோடு கூச்சலிட்டார். உடனே பைக்கில் வந்தவர், அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றுவிட்டார். தன் கண் முன்னால் மகளுக்கு நடந்த கொடுமையை அறிந்த முன்னாள் ராணுவ வீரர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர், அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரஜீஸ்பாபு சம்பந்தப்பட்ட இளம்பெண்ணிடம் விசாரித்தார்.
பின்னர் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் பதிவு செய்தனர். அப்போது பைக்கில் வரும் நபர், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெளிவாக பதிவாகியிருந்ததது. அவரின் பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
அண்ணாநகரில் நடந்த சம்பவத்தைப்போல கீழ்ப்பாக்கம் பகுதியிலும் வாக்கிங் சென்ற பெண்களிடம் பைக்கில் வரும் நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் பாலியல் சீண்டலில் ஈடுபடுபவரைப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர்.

அதற்காக அவர் வரும் வழியில் காத்திருந்தனர். இந்தச் சூழலில் பைக்கில் வந்த நபர் வழக்கம் போல வாக்கிங் சென்ற இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றார். அதைக் கவனித்த போலீஸார் அவரை சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்தனர்.
பின்னர் அவரிடம் விசாரித்தபோது அவரின் பெயர் தினேஷ்குமார் என்றும் வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
தினேஷ்குமார் டெல்லியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை படித்து வருவதும் சென்னை எழும்பூரில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் டிரெயினிங் எடுத்துவருவதும் தெரியவந்தது.
தினமும் அதிகாலை நேரத்தில் வீட்டிலிருந்து எழும்பூருக்கு பைக்கில் செல்லும் தினேஷ்குமார், வாக்கிங் டிரஸில் செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும் இவர் மீது யாரும் புகாரளிக்காததால் தொடர்ந்து இந்தச் செயலில் தினேஷ்குமார் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

முன்னாள் ராணுவ வீரரின் மகள் கொடுத்த புகாரால் தினேஷ்குமார் கைது செய்யப்பட்டு மூன்று பைக்குகளை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.