தூத்துக்குடி ஸ்டெர்லைட் திறக்க அனுமதி இல்லை..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் மக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆலையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

கடந்த 2018 மே 22-ம் தேதி தூத்துக்குடியில் மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது.
போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து அதே ஆண்டு மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகம்.

இதை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் வழக்கை விசாரித்தனர்.
பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின் சுருக்கம் வருமாறு:
“தமிழக அரசு எடுத்த முடிவு சரியே. ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் மக்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை.
ஸ்டெர்லைட் ஆலை.

சுமார் 5 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆலையின் நச்சு புகையால் மூளையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி ஆய்வில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆலையை மூடியுள்ளதால் நாட்டின் தாமிர உற்பத்தி குறைந்துவிட்டது. தாமிர தேவையை பூர்த்தி செய்ய முடியாது. இது இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆலை நிர்வாகம் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மக்களின் நலன் கருதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு சரியானது.

வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *