நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி நடக்கும்… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டதால் இரு தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெற உள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வும், ஐஐடி கல்வி நிறுவன சேர்க்கைக்காக ஜேஇஇ நுழைவுத் தேர்வும் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி நீட், ஜூலை 18-ம் தேதி ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதிக்கும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரு நுழைவு தேர்வு தேதிகளுக்கும் தடை விதிக்க வேண்டும். தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி அருண் மிஸ்ரா அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அலாக் அலோக் ஸ்ரீவாஸ்தவன் ஆஜரானார். அவர் கூறும்போது, “கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. சிஏ, சிஎல்ஏடி உள்ளிட்ட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும்” வாதிட்டார்.

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு ஆணையம் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார்.
அவர் கூறும்போது, “போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும்” என்று உறுதியளித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அருண் மிஸ்ரா, ” கொரோனா காலத்திலும் வாழ்க்கை பயணம் தொடர்கிறது. இதில் தேர்வுகளை மட்டும் எப்படி ரத்து செய்ய முடியும். தேர்வை ரத்து செய்தால் மாணவ, மாணவியரின் எதிர்காலம் பாதிக்கப்படும்.

நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன” என்று தீர்ப்பளித்தார்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் திட்டமிட்டபடி நடப்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *