நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கடந்த ஜூன் 27-ம் தேதி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “எதிர்காலத்தில் வரலாற்று அறிஞர்கள் இந்தியா குறித்து ஆய்வு செய்யும்போது கடந்த 6 ஆண்டுகளில் அவசர நிலை அமல்படுத்தப்படாமல் ஜனநாயகம் அழிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்வார்கள்.
இதில் சுப்ரீம் கோர்ட்டின் பங்கையும் குறிப்பாக கடந்த 4 தலைமை நீதிபதிகளின் பங்கையும் நிச்சயம் குறிப்பிடுவார்கள்” என்று விமர்சித்திருந்தார்.
கடந்த ஜூன் 29-ம் தேதி பிரசாந்த் பூஷண் ட்விட்டரில் வெளியிட்ட மற்றொரு பதிவில், சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அதிநவீன மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.
அந்த புகைப்படத்துடன் அவர் தனது கருத்தையும் பதிவு செய்திருந்தார். “முகக்கவசம், ஹெல்மெட் அணியாமல் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிளை தலைமை நீதிபதி ஓட்டுகிறார்.

மக்களுக்கு நீதி கிடைக்க வழியில்லாமல் சுப்ரீம் கோர்ட்டை முடக்கி வைத்திருக்கிறார்” என்று அவர் விமர்சித்திருந்தார்.
இரு ட்விட்டர் பதிவுகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் குற்றவாளி. அவருக்கான தண்டனை விவரம் வரும் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை எதிர்த்து பிரசாந்த் பூஷண், மூத்த பத்திரிகையாளர் என்.ராம். முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள நிலையில், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.