மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு ரத்து

மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் கடந்த 2018-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.  

இவற்றை விசாரித்த உயர் நீதிமன்றம் மகாராஷ்டிர அரசின் இடஒதுக்கீடு சட்டத்தை ஏற்றுக் கொண்டது. எனினும் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது.  அந்த சமூகத்தினருக்கு கல்வியில் 13 சதவீதமும் வேலைவாய்ப்பில் 12 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை நீதிபதிகள் அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா, ரவீந்திர பட்  அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.  

இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை நீதிபதிகள் ரத்து செய்தனர்.

“1992-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். அதனை மறு பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பே இல்லை. அதன்படி மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிர அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம்.

மராத்தா சமூகத்தினருக்கு அதிக இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பில் மராத்தாவுக்கு கூடுதலாக 13 சதவீதம் இட ஒதுக்கீடு தருவது சட்டத்துக்கு எதிரானது” என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை மகாராஷ்டிராவின் மராத்தா வழக்கோடு சேர்த்து விசாரிக்கக் கோரி இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவற்றை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளை மராத்தா வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. மராத்தா இடஒதுக்கீடு வழக்கு முடிந்த பிறகு தமிழக இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படும்” என்று உத்தரவிட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *