ஹாத்ரஸ் வழக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலின வகுப்பை சேர்ந்த 19 வயது பெண் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவருக்கு அலிகர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 29-ம் தேதி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது நல மனுக்கள்
இளம்பெண்ணின் மரணத்துக்கு நீதி கோரி பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி சந்திர பான் சிங் மற்றும் 100 பெண் வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர் சத்யாமா துபே உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்திர பான் சிங் தனது மனுவில், “ஹாத்ரஸ் இளம்பெண்ணை குப்பையை எரிப்பதுபோல நள்ளிரவில் எரித்துள்ளனர். இந்த வழக்கில் மாநில போலீஸார், மாவட்ட ஆட்சியர் தவறு இழைத்துள்ளனர்.
அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். இளம்பெண்ணின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.
கீர்த்தி சிங், கனிகா உட்பட 100 பெண் வழக்கறிஞர்கள் இணைந்து தாக்கல் செய்துள்ள மனுவில், “பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பான சட்டங்கள் முறையாக அமல் செய்யப்படவில்லை.
இதன்காரணமாக குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது துளியும் பயம் இல்லை. அவர்கள் துணிச்சலாக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுகின்றனர். இதை தடுக்க பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் சத்யாமா துபே தாக்கல் செய்துள்ள மனுவில், “ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் அல்லது ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடைபெற வேண்டும்” என்று கோரியுள்ளார்.
தலைமை நீதிபதி விசாரணை
இந்த பொது நல மனுக்கள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியம் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், கீர்த்தி சிங், பிரதீப் குமார் யாதவ், சஞ்சீவ் மல்ஹோத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறும்போது, “உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இல்லை. உச்ச நீதிமன்றம் நியமிக்கும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும். பெண்ணின் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று கோரினார்.
மற்றொரு வழக்கறிஞர் கீர்த்தி சிங் வாதிடும்போது, “உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
உத்தர பிரதேச அரசு விளக்கம்
உத்தர பிரதேச அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார். அவர் கூறும்போது, “உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நேர்மையாக விசாரணை நடத்தப்படுகிறது.
ஆனால் அரசியல் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரினார்.
உத்தர பிரதேச அரசு சார்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”ஹாத்ரஸ் சம்பவத்தில் செப்டம்பர் 14-ம் தேதியே வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் செப்டம்பர் 19-ம் தேதி மானபங்க குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டது. அந்த பெண் மீண்டும் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கடந்த 22-ம் தேதி பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சேர்க்கப்பட்டது.
எனினும் மருத்துவ அறிக்கையில் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஹாத்ரஸ் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் கலவரம் வெடிக்கும் அபாயம் நிலவியது.
இதன்காரணமாகவே பெண்ணின் உறவினர்கள் ஒப்புதலுடன் நள்ளிரவில் உடல் எரிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி கருத்து
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டபிறகு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
“ஹாத்ரஸ் வழக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் தங்களுக்காக வாதாட வழக்கறிஞரை தேர்வு செய்து விட்டார்களா என்பதை கேட்டறிந்து நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்த விவரங்களை உத்தர பிரதேச அரசு விரிவான அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக அலகாபாத் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் ஹாத்ரஸ் வழக்கு நடைபெறுவது குறித்த பரிந்துரைகளை அனைத்து தரப்பினரும் அளிக்கலாம்.
அதன் அடிப்படையில் உரிய முடிவு எடுக்கப்படும். ஒரு வாரத்துக்குப் பிறகு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்” என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.