தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமா? என்பது குறித்து மத்திய அரசு தனது பதிலை தெரிவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய தண்டனை சட்டம், பிரிவு 309-ன்படி தற்கொலைக்கு முயற்சி செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த சட்டப்பிரிவின்படி தற்கொலைக்கு முயற்சி செய்தவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்க முடியும்.
கடந்த 2017-ம் ஆண்டில், மனநல சுகாதார பராமரிப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம் கடந்த 2018 ஜூலையில் அமலுக்கு வந்தது.
இச்சட்டத்தின் 115-வது பிரிவின்படி, மனஅழுத்தத்தால் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்தால் அவரை தண்டிக்கக்கூடாது. அவருக்கு தகுந்த மன நல, உடல் நல சிகிச்சை அளிக்க வேண்டும்.
இதனிடையே விலங்குகள் நல ஆர்வலர் சங்கீதா டோக்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
“தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் சிலர் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட விலங்குகளின் கூண்டில் நுழைகின்றனர். இதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று அவர் மனுவில் கோரியுள்ளார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்பிரமணியன் அமர்வு முன்பு இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
விலங்குகளின் கூண்டில் மனிதர்கள் நுழைவதை எங்களால் தடுக்க முடியாது. எனினும் இந்த மனுவின் மூலம் தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றமா, இல்லையா என்ற பிரச்சினை எழுப்பப்படுகிறது.
இந்திய தண்டனை சட்டம், பிரிவு 309-ன் படி தற்கொலை முயற்சி தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அதேநேரம் மனநல சுகாதார பராமரிப்புச் சட்டம், பிரிவு 115-ன்படி, மனஅழுத்தத்தால் தற்கொலைக்கு முயற்சி செய்வோருக்கு தண்டனை வழங்கக்கூடாது.
அவர்களுக்கு உரிய மன, உடல்நல சிகிச்சை அளிக்க வேண்டும்.
இந்திய தண்டனை சட்டம், பிரிவு 309-ஐ எதிர்த்து ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.