கொரோனா பரவல்.. சுப்ரீம் கோர்ட் சூடு

கொரோனா பரவல் தொடர்பாக மாநில அரசுகளை சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது.

கொரோனா வைரஸ் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர். ஷா, சுபாஷ் ரெட்டி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

“டெல்லியில் நாள்தோறும் 15,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது.

அதற்கேற்க தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ சிகிச்சை வசதிகளை ஏற்படுத்துமாறு டெல்லி அரசுக்கு மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் டெல்லி அரசு குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை.

டெங்கு காய்ச்சல் தடுப்பு தொடர்பாக டெல்லி அரசு தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் கரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக விளம்பரம் வெளியிடவில்லை. கரோனா பரிசோதனைகளும் அதிகரிக்கப்படவில்லை.

வீடு, வீடாக சோதனை நடத்த மத்திய சுகாதாரத் துறை டெல்லி அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இவ்வாறு சோதனை நடத்தப்படவில்லை. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை முறையாக கண்காணிக்கவில்லை. 

இந்தியாவில் 30 கரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 5 தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் 2 தடுப்பூசிகள் 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன. 3 தடுப்பூசிகள் 2-ம் கட்ட பரிசோதனையில் உள்ளன.

கரோனா தடுப்பூசி வர்த்தகரீதியாக தயாரானதும் மக்களுக்கு விரைந்து தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதற்காக நிதி ஆயோக் உறுப்பினர் தலைமையில் தேசிய அளவில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று மத்திய அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் கண்டனம்

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தனர்.

“குஜராத்தின் ராஜ்காட்டில் உள்ள கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டு 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். 

இதற்கு முன்பு குஜராத்தின் அகமதாபாத், ஆந்திராவில் உள்ள கரோனா மருத்துவமனைகளிலும் தீ விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. 

எங்களுக்கு அறிக்கைகளில் ஆர்வம் இல்லை. கொரோனா மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டதற்கான மூல காரணத்தை மத்திய அரசு கண்டறிய வேண்டும். 

நடப்பு நவம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. ஆனால் கேளிக்கை, கொண்டாட்டங்கள் எவ்வித தடையும் இன்றி நடைபெறுகின்றன. 60 சதவீத மக்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிகின்றனர். 30 சதவீத மக்களின் முகக்கவசம் தாடையில் தொங்குகிறது. இப்போதே நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மோசமான விளைவுகள் ஏற்படும் ஆபத்து உள்ளது.  

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநில அரசுகள் செயல்பட வேண்டும். மத்திய அரசு வழிகாட்டு நெறிகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வழிகாட்டு நெறிகளை மாநில அரசுகள் முறையாக அமல்படுத்தாதது ஏன்? இப்போதைய நிலையில் கொரோனா வைரஸுக்கு மருந்து இல்லை. இந்த சூழ்நிலையில் தடுப்பு நடைமுறைகளை அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

பொது இடங்களில் அதிக கூட்டம் கூடுவதை அரசு அதிகாரிகள் தடுக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அவர் கூறும்போது, “கொரோனா மருத்துவமனைகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் தொடர்பாக அவசர கூட்டம் நடத்தப்படும். மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, மேற்குவங்கம், கர்நாடகா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட 10 மாநிலங்களில் கரோனா தொற்று அதிகமாக உள்ளது.

அந்த மாநிலங்களின் அரசுகள் வைரஸ் பரவலை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.  வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *