ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். இதைத் தொடர்ந்து துணை முதல்வர், காங்கிரஸ் மாநில தலைவர் பதவி பைலட்டின் இருந்து பறிக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காததால் பைலட், அவரது ஆதரவாளர்கள் என 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீஸுக்கு எதிராக ராஜஸ்தான் ஐகோர்ட்டில் சச்சின் வழக்கு தொடர்ந்தார். சபாநாயகர் ஜோஷி சுப்ரீம் கோட்டுக்கு சென்றார்.

கடந்த 24-ம் தேதி ஐகோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வரும் 27-ம் தேதி வரை சச்சின் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.
இந்த பின்னணியில் சுப்ரீம் கோர்ட்டில் சபாநாயகர் ஜோஷி தொடர்ந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.
சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்குமா, இந்த உத்தரவு யாருக்கு சூடு வைக்கும் என்பது தெரியவில்லை.எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகார வழக்கு ஐகோர்ட்டிலும் இன்று விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவை அறிந்த பிறகு அதற்கேற்ப ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2018-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 6 எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 2019-ம் ஆண்டில் அவர்கள் ஆளும் காங்கிரஸில் ஐக்கியமாகினர். இதன்காரணமாக காங்கிரஸின் பலம் 107 ஆக உயர்ந்தது. தற்போது 19 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றிருப்பதால் அந்த கட்சியின் பலம் 88 ஆக குறைந்திருக்கிறது.
அப்போது கடும் அதிருப்தி தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சி இப்போது ராஜஸ்தான் ஐகோர்ட்டில் புதிதாக ஒரு வழக்கை தொடர்ந்துள்ளது. அதில் 6 எம்எல்ஏக்கள் காங்கிரஸில் இணைந்தது சட்டவிரோதம். கட்சி தாவல் சட்டத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.