நடிகை வனிதாவை யூடியூப்பில் விமர்சித்த சூர்யாதேவியை போலீஸார் கைது செய்தனர்.
நடிகை வனிதா விஜயகுமார் குறித்து சென்னையைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் சூர்யதேவி,தன்னுடைய யூடியூப் சேனலில் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நடிகை வனிதா விஜயகுமார், சூர்யாதேவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது, “நான் மேற்கண்ட முகவரியில் என் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். நான் திரைப்பட நடிகை மற்றும் சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்திவருகிறேன். கடந்த 27.6.2020-ல் எங்கள் வீட்டில் எனக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் இருமணம் சேரும் விழா நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.

எங்களுடைய நிகழ்வு அனைத்து சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையே எங்களுடைய இவ்விழாவினை எதிர்ப்பு தெரிவித்து பீட்டர்பாலின் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவருக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் சூர்யாதேவி என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்திலும் யூடியூப் வாயிலாகவும் மிகவும் அருவருக்க தக்க வார்த்தைகளிலும் என்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
என்னுடைய வீட்டிற்கு வெளியில் வந்து நின்று கொண்டிருப்பதாகவும் தனக்கு 5 நிமிடம் ஆகாது உன் வீட்டிற்குள் நுழைந்து உன்னை சாகடிப்பேன் என்றும் என்னை பற்றி பேசுவதற்காகவே ஒரு யுடியூப் சேனலை தொடங்கி இருப்பதாகவும் அவருடைய வாழ்க்கை லட்சியமே என்னை அழிப்பதுதான் என்று பகீரங்கமாக அவதூறாகவும் ஆபாசமாகவும் என்னைப்பற்றி சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்.
அவருடைய பேச்சு வன்முறையை தூண்டுவது போல் உள்ளது. என் வீடு புகுந்து என்னை கடத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி என் வீட்டு முன்பே ஒரு வீடியோவை பதிவு செய்து பகிர்ந்துள்ளார். இந்த சூர்யா தேவி யார் என்று விசாரித்ததில் இவர் ஏற்கெனவே தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை பற்றியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப்பற்றியும் தரக்குறைவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் என்றும் தெரியவந்தது.

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை சமூகவலைதளங்களில் விமர்சிப்பதற்கு நான் யாருக்கும் அனுமதி தரவில்லை. ஆனால் சூர்யாதேவியின் பேச்சை பொதுமக்கள் எல்லோரும் கேட்கவேண்டும் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். எலிசபெத் மற்றும் சூர்யாவும் சேர்ந்து கொண்டுதான் என்னிடமிருந்து பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் அவர்களுடைய எண்ணம் ஈடேறவில்லை என்றால் கொலை மிரட்டல் விடும் தோணியில் அவதூறு கருத்துக்களை எனக்கு எதிராக பதிவிட்டு வருகிறார்கள்.
இவர்கள் 2 பேரின் செயலுக்கு எனக்கு மிகவும் மனஉளைச்சலை கொடுக்கிறது. எனது யூடியூப் சேனலை பெண்களும் குழந்தைகளும் பார்க்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரின் ஆபாச பதிவுகள் ட்ரெண்டிங் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் ஆபாசத்தையும் வன்முறையையும் பரப்புகிறார்கள்.
ஆகவே என்னை பற்றி சமூகவலைதளங்களில் தூண்டிவிடும் வகையில் பேசி வரும் சூர்யா தேவி மீது தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்என்று குறிப்பிட்டுள்ளார்.
புகாரின் பேரில் வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் சூர்யாதேவி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கொரோனா மருத்துவ பரிசோதனைக்குப்பிறகு சூர்யா தேவியை போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யாதேவிக்கு ஜாமீன் வழங்கினார் பின்னர் சூர்யாதேவி நிருபர்களிடம் “நேற்றிரவு வீட்டில் குழந்தைகளுடன் இருந்தபோது வடபழனி போலீஸார் வீட்டுக்கு வந்தனர். விசாரணைக்கு வரும்படி காவல் நிலையத்துக்கு அழைத்தனர். குழந்தைகள் தனியாக இருப்பார்கள் என்று கூறினேன்.
அதற்கு சமரசமாக பேசுவதற்காகத்தான் அழைத்துச் செல்கிறோம் என்று போலீஸார் கூறினர். உடனே நான் என்னுடைய வழக்கறிஞரிடம் போனில் பேசினேன். அவர் கூறிய பிறகு நான் தனியாக காவல் நிலையத்துக்கு சென்றேன். அப்போது அங்கு நடிகை வனிதா, அவரின் வழக்கறிஞர் ஆகியோர் வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக போலீஸார் நடந்துக் கொண்டனர்.

ஏற்கெனவே நான் நடிகை வனிதா மீது கொடுத்த புகாருக்கு எனக்கு சிஎஸ்ஆர் கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்காமல் நடிகை வனிதா கொடுத்தபுகாரின் பேரில் என்னை கைது செய்துள்ளனர். கேட்டால் அது பெரிய இடத்து ஆர்டர் என்று போலீஸார் சொல்கிறார்கள். என்னைப்பற்றி நடிகை வனிதா, அவரின் வழக்கறிஞர் பேசிய தவறான தகவல்களை வாபஸ் பெற வேண்டும். அதுவரை நான் நடிகை வனிதா குறித்துபேசுவேன்” என்றார்.
நடிகை வனிதா, சூர்யாதேவி மீதுமட்டுமல்லாமல் 2 நடிகைகள் மீதும் புகாரளித்துள்ளார்.