180 கிலோ தங்கத்தை கடத்திய ஸ்வப்னா

கேரளாவில் இருந்து இதுவரை 180 கிலோ தங்கத்தை ஸ்வப்னாவும் அவரது கூட்டாளிகளும் கடத்தி வந்திருப்பதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்துக்கு கடந்த 3-ம் தேதி ஒரு விமானத்தில் ஒரு பார்சல் வந்தது. திருவனந்தபுரத்தில் செயல்படும் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு அந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்தது.


எக்ஸ்ரே பரிசோதனையில் பார்சலில் உலோகம் இருப்பது தெரியவந்தது. தூதரகத்திடம் கேட்டபோது பேரிச்சம் பழம், பிஸ்கெட் உள்ளிட்ட உணவு பொருட்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

என்ஐஏ அதிகாரிகள் பிடியில் ஸ்வப்னா


தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட பார்சல் என்பதால் விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பார்சலை திறக்கவில்லை. டெல்லியில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து உயரதிகாரிகள் திருவனந்தபுரத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் பார்சல் திறக்கப்பட்டது. 75 கிலோ எடை கொண்ட பார்சலில் 30 கிலோ தங்கம் இருந்தது. இதன் மதிப்பு ரூ.13.5 கோடியாகும்.


திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பார்சல் மாட்டிக் கொண்டபோது கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து பார்சலை விடுவிக்கக் கோரி தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தால் அரசியல் நெருக்கடி எழுந்தது.


இதைத் தொடர்ந்து கேரள அரசு கேட்டுக் கொண்டதின்பேரில் மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ விசாரணையில் மர்மமுடிச்சுகள் அவிழத் தொடங்கின.
தங்க கடத்தல் வழக்கில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் மற்றும் அருண், சந்தீப் நாயர், இம்ஜாத் அலி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.


இதில் ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும் அந்த துறையின் செயலாளர் சிவசங்கரனுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் கைது செய்யப்பட்ட பைசல் பரித்


ஸவப்னா மற்றும் அவரது கூட்டாளிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இதுவரை 23-க்கும் மேற்பட்ட தடவை தங்கத்தை கடத்தி வந்துள்ளனர். அந்த வகையில் சுமார் 180 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளது.


ஹவாலா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கும் தங்க கடத்தலில் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. தங்க கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி பைசல் பரித் துபாயில் பதுங்கியிருந்தார். அவரை இந்தியா கொண்டு வர என்ஐஏ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.


இதையறிந்த பைசல் பரித் துபாயில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறி தலைமறைவானார். தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு துபாய் போலீஸார், பைசல் பரித்தை கைது செய்துள்ளனர். அவர் நாளை இந்தியா கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *