கேரள தங்க கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் இன்று கைது செய்யப்பட்டார்.
கடந்த 3-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் ஒரு பார்சல் வந்தது. அங்குள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக அலுவலகத்துக்கு பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. எக்ஸ்ரே பரிசோதனையில் பார்சலில் மர்ம பொருள் இருப்பது தெரியவந்தது.
30 கிலோ தங்கம்
தூதரகத்திடம் விளக்கம் கேட்டபோது, பேரீச்சம் பழம், பிஸ்கட்டுகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரக உயரதிகாரிகள் நேரில் வரவழைக்கப்பட்டு அவர்கள் முன்னிலையில் பார்சல் திறக்கப்பட்டது.
அப்போது பார்சலில் 30 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.13.5 கோடியாகும்.
ஐக்கிய அரபு தூதரகத்தின் பெயரில் தங்கத்தை கடத்தியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அந்த தூதரகத்தின் முன்னாள் ஊழியர்கள் சரித் குமார், ஸ்வப்னா சுரேஷுக்கு தங்க கடத்தலில் நேரடி தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அரசு ஊழியர்
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு தூதரகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக சரித் குமார் பணியாற்றியுள்ளார். பின்னர் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனினும் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை விமான நிலையத்தில் இருந்து தூதரகத்துக்கு எடுத்துச் செல்லும் ஒப்பந்தம் சரித் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், தூதரகத்தின் நிர்வாக செயலாளராக பணியாற்றி உள்ளார். பின்னர் அங்கிருந்து விலகி,கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை ஆபரேஷனல் மேலாளராக பணியில் சேர்ந்துள்ளார். அந்த துறையின் செயலாளரும் முதல்வர் பினராயி விஜயனின் தனிச்செயலாளருமான சிவசங்கரன், பல்வேறு விவகாரங்களில் ஸ்வப்னாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
என்ஐஏவுக்கு வழக்கு மாற்றம்
விமான நிலையத்தில் தங்க பார்சல் பிடிபட்டபோது, அந்த பார்சலை விடுவிக்க முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலமாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக சிவசங்கரன் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். சரித் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்வப்னா தலைமறைவானார்.
மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேரள அரசு கேட்டுக் கொண்டதன்பேரில் தங்க கடத்தல் வழக்கு, தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் என்ஐஏ வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது.
என்ஐஏ அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் முகாமிட்டு ஸ்வப்னா சுரேஷை தேடி வந்தனர். தீவிர தேடுதல் வேட்டையில் பெங்களூருவில் ஸ்வப்னா சுரேஷ் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
சிக்கியது எப்படி?
சரித் குமார் கைது செய்யப்பட்டதும் ஸ்வப்னா சுரேஷ், திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சி வழியாக பெங்களூருவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்குள்ள வீட்டில் 3 நாட்கள் பதுங்கி இருந்துள்ளார்.
தங்க கடத்தலில் தொடர்புடையவர்களின் செல்போன் உரையாடல்களை தீவிரமாக கண்காணித்ததில் ஸ்வப்னா சுரேஷ் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. அவரையும் அவரது கூட்டாளி சந்தீப் நாயரையும் என்ஐஐ அதிகாரிகள் கைது செய்தனர். இருவரும் நாளை கொச்சிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
கொஞ்சியை சேர்ந்த பைசல் பரீத்துக்காக தங்க கடத்தலில் ஈடுபட்டதாக சரித் குமார் ஏற்கெனவே வாக்குமூலம் அளித்துள்ளார். பைசல் பரீத் துபாயில் உள்ளதாகத் தெரிகிறது. அவரை கைது செய்யவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தீவிரவாத தொடர்பு
தங்க கடத்தல் வழக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்று ரா, ஐ.பி. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷுக்கு, கேரள ஐபிஎஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த ஐபிஎஸ் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.