கேரள தங்க கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரியிடம் 9 மணி நேரம் விசாரணை- ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பிருந்ததாக ஒப்புதல்

கேரள தங்க கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்ஐஏ அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் தங்க கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷுடன் தனக்கு நெருங்கிய தொடர்பிருந்ததை சிவசங்கரன் ஒப்புக் கொண்டார்.


கடந்த 3-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சல் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. எக்ஸ்ரே பரிசோதனையில் பார்சலில் மர்ம பொருள் இருப்பது தெரியவந்தது.

30 கிலோ தங்கம்


தூதரகத்துக்கு அனுப்பப்பட்ட பார்சல் என்பதால் சுங்கத் துறை அதிகாரிகள் பார்சலை திறக்கவில்லை. தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர். அவர்கள் பார்சலில் பேரிச்சம்பழம், பிஸ்கெட் உள்ளிட்ட உணவு பொருட்கள் இருப்பதாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் மூத்த அதிகாரிகள் திருவனந்தபுரத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் முன்னிலையில் பார்சல் திறக்கப்பட்டது. அந்த பார்சலில் 30 கிலோ தங்கம் இருந்தது. இதன் மதிப்பு 13 கோடியே 50 லட்ச ரூபாயாகும்.

முதல்வர் அலுவலகம்



இந்த கடத்தலில் திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ்,சரித் குமார் மற்றும் சந்தீப் நாயர் உள்ளிட்டோருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. சரித் குமார் கைது செய்யப்பட்டார். ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் தலைமறைவாகினர்.
இதில் ஸ்வப்னா சுரேஷ் கேரள அரசின் தகவல் தொழில் நுட்ப துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அந்த துறையின் செயலாளர் சிவசங்கரன் ஐஏஎஸ் உடன் ஸ்வப்னாவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனிச் செயலாளராகவும் சிவசங்கரன் பதவி வகித்தார்.

என்ஐஏவுக்கு வழக்கு மாற்றம்


திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தங்க பார்சல் பிடிபட்டபோது, அந்த பார்சலை விடுவிக்க முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி மூலம் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சிவசங்கரன் ஐஏஎஸ் விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.

தங்க கடத்தலில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கேரள முதல்வர் கேட்டுக் கொண்டதன் பேரில் தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) தங்க கடத்தல் வழக்கு மாற்றப்பட்டது.


கடந்த 10-ம் தேதி முதல் என்ஐஏ அதிகாரிகள் வழக்கை விசாரித்து வருகின்றனர். கடந்த 11-ம் தேதி பெங்களூருவில் பதுங்கியிருந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் சுரேஷ் கைது செய்யப்பட்டனர். கொச்சியை சேர்ந்த பைசல் பரீத்துக்காக தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் சிலர் கைது



பைசல் பரீத் துபாயில் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய என்ஐஏ தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவரோடு தொடர்புடையவர்கள் கேரளாவில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், எர்ணாகுளத்தை சேர்ந்த ஜலால், காண்டாட்டி ஹம்ஜத் அலி, மலப்புரத்தை சேர்ந்த முகமது ஷபி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஸ்வப்னா சுரேஷுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கேரள தலைமைச் செயலக ஊழியர் அருண் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். கடத்தல்காரர்கள் தங்குவதற்கு இவர் இடம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். ஸ்வப்னா சுரேஷின் கணவர் ஜெயசங்கருக்கும் தங்க கடத்தலில் நெருங்கிய தொடர்புள்ளது. அவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று தெரிகிறது.

ஐஏஎஸ் அதிகாரியிடம் விசாரணை



இதனிடையே சிவசங்கரன் ஐஏஎஸ் அதிகாரியிடம் என்ஐஏ அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் தங்க கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷுடன் தனக்கு நெருங்கிய தொடர்பிருந்ததை சிவசங்கரன் ஒப்புக் கொண்டார்.


கேரளாவின் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளுடனும் ஸ்வப்னா சுரேஷுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. என்ஐஏ விசாரணையால் அவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *