கேரள தங்க கடத்தல் வழக்கில் நாள்தோறும் வெளியாகும் புதிய தகவல்கள், என்ஐஏ விசாரணை அதிகாரிகளையே தலைசுற்ற வைத்து கொண்டிருக்கிறது. உள்ளூர் ரவுடி முதல் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் வரை வழக்கு நீண்டு செல்கிறது. உள்ளூர் அல்வா கேஸ்கள் மூலம் வெளிநாட்டு ஹவாலா வரை கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறது.
தங்க கடத்தலின் மையப் புள்ளியான ஸ்வப்னா சுரேஷ், கிட்டத்தட்ட மகாராணியாகவே வாழ்ந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வங்கி லாக்கரில் இருந்து ஒரு கிலோ தங்கம், ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ஒரு கிலோ தங்கமும், ஒரு கோடி ரூபாயும் தனக்கு திருமண பரிசாக கிடைத்தது என்று வழக்கை விசாரிக்கும் என்ஐஏ அதிகாரிகளிடம் ஸ்வப்னா வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஸ்வப்னாவின் மற்றொரு வங்கி லாக்கரில் இருந்து 45 லட்ச ரூபாயை என்ஐஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த பணத்தை கைசெலவுக்கு வைத்திருந்ததாக ஸ்வப்னா கூறியுள்ளார். கை செலவுக்கு 45 லட்சமாக என்று விசாரணை அதிகாரிகளே வாயை பிளந்துள்ளனர்.
ஸ்வப்னாவுக்கு மேலும் பல்வேறு வங்கிகளில லாக்கர்கள் இருக்கும் என்றும் பினாமி பெயர்களிலும் அவர்கள் லாக்கர்களை வைத்திருக்கக்கூடும் என்று என்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
எனவே லாக்கர் வேட்டையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கேரள தகவல் தொழில்நுட்ப துறையின் முன்னாள் செயலாளர் சிவசங்கரிடம் என்ஐஏ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது. தங்க கடத்தலில் அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைக்கும் நிலையில் அவர் கைது செய்ய்பபடுவார் என்று தெரிகிறது.