கேரள தங்க கடத்தல் வழக்கில் ‘சொக்கத் தங்கம்’ ஸ்வப்னா சுரேஷின் 32பக்க வாக்குமூலம் கொச்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 5-ம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ கடத்தல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முன்னாள் ஊழியரும் கேரள தகவல் தொழில்நுட்ப துறை அலுவலருமான ஸ்வப்னா சுரேஷ் உட்பட 10 பேரை என்ஐஏ அதிகாரிகள் இதுவரை கைது செய்துள்ளனர். ஸ்வப்னாவிடம் இருந்து கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக சமூக வலைதளங்களில் அவர் சொக்கத் தங்கம் என்று நக்கலடிக்கப்படுகிறார்.
கேரளாவின் கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் தங்க கடத்தல் வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சுங்கத் துறை இன்று தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில் ஸ்வப்னா சுரேஷின் 32 பக்க வாக்குமூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.

தங்க கடத்தல் வழக்கில் ஹவாலா, தீவிரவாத தொடர்புகள் இருப்பதால் ஆரம்பம் முதலே வழக்கு விசாரணை விவரங்கள் கசிந்துவிடாமல் என்ஐஏ ரகசியம் காத்து வருகிறது. சுங்கத் துறையும் மவுனம் காக்கிறது. சுங்கத் துறையிடம் ஸ்வப்னா என்ன சொன்னார் ? அவரது வாக்குமூலத்தில் என்ன இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இதற்கிடையில் கடந்த 2010-ம் ஆண்டில் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய பேராசிரியர் ஜோசப் கை துண்டிப்பு வழக்கில் தொடர்புடைய எர்ணாகுளத்தை சேர்ந்த முகமது அலி என்பவர் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் இப்ராஹிம், ஜலால், ஆலவி, முகமது ஷபி, அப்டு ஆகிய 5 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.