சுவாதி கொலை வழக்கு; ராம்குமார் மரணத்தில் அவிழ்ந்த மர்மமுடிச்சுக்கள்

2016ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி காலை நேரத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலுக்காக பயணிகள் பிளாட்பாரத்தில் காத்திருந்தனர். அங்கிருந்த இருக்கையில் இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது இளம்பெண்ணின் அருகே இளைஞர் ஒருவர் வந்தார். அவர் இளம்பெண்ணிடம் ஏதோ பேச, அடுத்த சில நிமிடங்களில் இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. மின்னல் வேகத்தில் இளைஞர் அங்கிருந்து ரத்தக்கறைப் படிந்த அரிவாளுடன் ஓடிக்கொண்டிருந்தார்.

சத்தம் கேட்ட திசையை நோக்கி பயணிகளும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரும் செல்ல, அங்கு ரத்த வெள்ளத்தில் இளம்பெண் கிடந்தார். இளம்பெண் யாரென்று விசாரித்தபோது அவரின் பெயர் சுவாதி என்றும் இன்ஜினீயராக வேலைப்பார்த்து வந்ததும் தெரியவந்தது. சுவாதியின் குடும்பத்தினருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். பட்டப்பகலில் அதுவும் பயணிகள் கண் முன்னால் இப்படியொரு சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவாதியின் கொலைக்கு நீதி வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலித்தன.

கொலை நடந்த பிளாட்பாரத்தில் சிசிடிவி இல்லாததால் கொலையாளியைப் பிடிப்பதில் சிக்கல் எழுந்தது. ரயில் நிலையத்தையொட்டியுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து அப்போதைய நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள ராம்குமார் என்ற இளைஞனை போலீஸார் கைது செய்தனர்.

சுவாதியை ராம்குமார், ஒருதலையாக காதலித்தாகவும் அதனால் ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். வீட்டில் பதுங்கியிருந்த ராம்குமாரை போலீஸார் பிடிக்கச் சென்றபோது அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு ராம்குமார், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் ஒருவித மனஅழுத்தத்தில் இருப்பதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்தது. இந்தச் சூழலில் 2016-ம் தேதி செப்டம்பர் 18-ம் தேதி ராம்குமார், சிறையில் உள்ள மின்வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

சுவாதி கொலையில் ராம்குமார் கைது, சிறையில் ராம்குமார் மரணம் என இரண்டு சம்பவங்களிலும் மர்மங்கள் இருப்பதாக ராம்குமாரின் பெற்றோர், அவரின் வழக்கறிஞர் ராம்ராஜ் ஆகியோர் தெரிவித்துவந்தனர். ராம்குமார் மரணத்துக்குப் பிறகு சுவாதி கொலை வழக்கு விசாரணை நிறைவடைந்தது. இந்தச் சூழலில் ராம்குமாரின் மரணம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் விசாரணை நடந்து வந்தது.

விசாரணையின்போது ராம்குமாரின் சடலத்தைப் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் சில அதிர்ச்சி தகவல்களைத் தெரிவித்தனர். அதோடு ராம்குமாரின் உடல் உறுப்புக்களின் திசுக்களையும் ஹிஸ்டோபேத்தாலஜி (Histopathology) ஆய்வு செய்யப்பட்டது. அதில் ராம்குமாரின் மூளை, இதயம், நுரையீரல், நாக்கு, கல்லீரல், மண்ணீரல், மேல் உதடு, கீழ் உதடு, சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் திசுக்களை செய்யப்பட்ட ஆய்வில் மின்சாரம் தாக்கியதற்கான பாதிப்புகள் இல்லை எனத் தெரியவந்திருக்கிறது.

பொதுவாக மின்சாரம் பாய்ந்து இறப்பவர்களின் திசுக்களில் அந்தப் பாதிப்புகள் இருக்கும். ஆனால், ராம்குமாரின் திசுக்களில் அந்தப் பாதிப்புகள் இல்லை என்ற ரிப்போர்ட்டே மரணத்திற்கான மர்ம முடிச்சுக்கள் அவிழத் தொடங்கியுள்ளது. மேலும் ராம்குமாரின் சடலத்தில் 12 காயங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மின்சாரம் தாக்கி உயிரிழப்பவர்களுக்கு இவ்வளவு காயங்கள் ஏற்படவும் வாய்ப்பு இல்லை எனவும் நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் பிணவறைக்கு ராம்குமார் சடலம் வந்த நேரத்திலும் குளறுபடி இருப்பதாக ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் அவர் இன்னொரு காரணத்தையும் சொல்லியிருக்கிறார். அதுஎன்னவென்றால் ராம்குமார் உயிரிழந்தப்பிறகு அவருக்கு இசிஜி எடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

ராம்குமாரின் அப்பா பரமசிவன், தன்னுடைய மகனுக்கு விஷ ஊசி போட்டியிருப்பதற்கான அறிகுறிகள் அவனின் கையில் இருந்ததாகவும் உடலில் உள்ள காயங்களுக்கு சூடு வைத்தே காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். ராம்குமாரின் மரணம் தொடர்பாக அவரின் பெற்றோர், வழக்கறிஞர் ராம்ராஜ் வைக்கும் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுக்களுக்கு தமிழக காவல்துறை என்ன பதில் சொல்லப்போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *