தமிழகத்தில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக 4 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் புதிதாக 4 ஆயிரத்து 150 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,510 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 1713 பேர்
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான நடவடிக்கைகளால் வைரஸ் பரவல் குறைந்திருக்கிறது. சென்னையில் இன்று புதிதாக 1,713 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் 62 ஆயிரத்து 778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எம்எல்ஏவுக்கு கொரோனா
மாவட்டவாரியாக மதுரையில் 308, செங்கல்பட்டில் 274, திருவள்ளூரில் 209, வேலூரில் 179, காஞ்சிபுரத்தில் 152, திருவண்ணாமலையில் 141, விருதுநகரில் 113, விழிப்புரத்தில் 109 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூரை தவிர இதர அனைத்து மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் கே அர்ஜுனனுக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அண்மையில் மதுரைக்கு சென்றுவிட்டு கோவை திரும்பியுள்ளனர். முதலில் அவரது மகள், மருமகன், பேத்திக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. பின்னர் எம்எல்ஏவுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் ஆய்வு
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று கொரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெறும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியும் உடன் சென்றார்.