தமிழகத்தில் இன்று புதிதாக 4 ஆயிரத்து 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் மாநிலம் முழுவதும் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 820 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 340 பேர் குணமடைந்துள்ளனர். 47 ஆயிரத்து 912 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து இதுவரை 2,167 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டவாரியாக சென்னையில் இன்று ஆயிரத்து 291 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மதுரையில் 341, திருவள்ளூரில் 278, தூத்துக்குடியில் 269, செங்கல்பட்டில் 186, விருதுநகரில் 175, திருநெல்வேலியில் 164, காஞ்சிபுரத்தில் 163, கன்னியாகுமரியில் 135 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. இதற்குப் போட்டியாக மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களால் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளது.