கொரோனா- “தமிழகத்தின் பலமே, 18,000 அரசு டாக்டர்கள்தான்”

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி மரு. சா. பெருமாள் பிள்ளை வெளியிட்டிருக்கும் அறிக்கை:

1) சுகாதாரத் துறையில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு, அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பான உழைப்பே முக்கிய காரணம் என்பது அனைவருக்கும் தெரியும்.
2) அனைவரையுமே அச்சுறுத்தி வரும் கொரோனாவை ஒட்டி, நாட்டில் உள்ள கோவில்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ள நிலையிலும், தங்கள் உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல், இரவு, பகலாக மக்களைக் காப்பாற்ற போராடி வருகிறோம்.

doctor
மருத்துவர் பெருமாள் பிள்ளை

பீகாரைவிட குறைவு


3) சுகாதாரத் துறையில் செயல்பாடுகளில் 25 வது இடத்திலுள்ள பீகார் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் கூட, அரசு மருத்துவர்களுக்கு கௌரவமான ஊதியம் தரப்படும்போது, சிறந்த மாநிலமாக உள்ள தமிழகத்தில், அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே குறைவான ஊதியத்தை அரசு வழங்குவது மிகுந்த வேதனை அளிக்கிறது.
4) அதுவும் இங்கு மற்ற துறையினருக்கு எல்லாம் அவ்வப்போது ஊதிய உயர்வு கிடைக்கிறது. ஆனால் டாக்டர்களுக்கு மட்டும் கடந்த 10 ஆண்டுகளாக குறைவான ஊதியமே கிடைக்கிறது. அதாவது தமிழகத்தில் டாக்டர்கள் மட்டும் வாழவே முடியாதா? வாழவே கூடாதா? அதுவும் அரசுப் பணியில் இருக்கவே கூடாதா? அப்படி இருப்பதாக இருந்தால், தொடர்ந்து அரசு நம்மை இரக்கமே இல்லாமல் நசுக்கிக் கொண்டேதான் இருக்குமா?

12 ஆண்டுகள்…


5) கொரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்கா, பிரேசில் உள்பட வளர்ந்த நாடுகளே திணறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் முக்கிய பலமே, 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள்தான் என்பது அரசுக்கும், மக்களுக்கும் நன்றாகவே தெரியும். இருப்பினும் இந்த நிலையில் கூட, உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகள் அரசுப் பணிக்குப் பிறகு, ஊதியப்பட்டை நான்கின் மூலம், ஒரு லட்சத்து 23 ஆயிரம் ஊதியத்தை தர அரசு மறுத்து வருவது வருத்தமளிக்கிறது.
6) சட்டசபையில் கொரோனா தடுப்பு பணிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் கேட்டபோது, இதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் நிதி ஒதுக்க தயாராக இருப்பதாக, முதல்வர் தெரிவித்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் பதில் அளித்தார். ஆனால் இங்கே கொரோனாவிடமிருந்து உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு, உரிய சம்பளத்தை தர மட்டும் அரசு தொடர்ந்து மறுத்து வருவது வருத்தமளிக்கிறது.

உயிரா, பொருளாதாரமா?


7) தற்போது இந்தியா மட்டுமன்றி அனைத்து நாடுகளிலும், மக்கள் உயிரா? பொருளாதாரமா? என கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதே உடனடியாகச் செய்ய வேண்டியது என நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் உயிரைக் காப்பாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, உரிய ஊதியத்தைக் கூட அரசு தர மறுப்பது எந்த வகையில் நியாயம்?
8) அதுவும் தற்போது கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள மக்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளுக்கே சிகிச்சைக்கு வரும் இந்த நேரத்தில்கூட நம்முடைய ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு மறுப்பதை நம்மால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.


9) தனியார் மருத்துவமனைகள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளதால், கடந்த 3 மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் நடப்பது இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகமாகி உள்ளது.
10) உயிரைக் காப்பாற்றுவதை விட முக்கியமான வேலை எதுவும் நாட்டில் இருப்பதாக தெரியவில்லை. அப்படி இருந்தும் தொடர்ந்து நமக்கு நாட்டிலேயே குறைவான, ஊதியம் தருவது ஏன்?

குமாஸ்தாவைவிட குறைவு


11) அரசு மருத்துவர்களின் ஊதியம் குமாஸ்தாவைவிட குறைவாக உள்ளதாக கருத்து தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் தர வேண்டும் என பல முறை அரசுக்கு வலியுறுத்தி உள்ளது.
12) மற்ற மாநிலங்களில் அரசு மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட, மாதா,மாதம் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் குறைவாக நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்கிறது.
13) அதுவும் மற்ற மாநிலங்களில் எம்.பி.பி.எஸ். மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட, குறைவாக இங்குள்ள எம்.பி.பி.எஸ்., ஸ்பெஷலிஸ்டு மற்றும் சூப்பர் ஸ்பெஷலிஸ்டு மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது.

மக்களைக் காப்போம்

  1. மருத்துவர்கள் தங்களை வருத்திக் கொண்டு, காந்திய முறையில் போராடிய பிறகும், மரு. லட்சுமி நரசிம்மன் உயிரையே கொடுத்த பிறகும், அரசு தங்களை தொடர்ந்து அவமானப்படுத்திய பிறகுமே, கொரோனாவுக்கு எதிராக முழு வீச்சில் பணியாற்றி வரும் நிலையிலும், மனச்சாட்சியே இல்லாமல், கோரிக்கையை நிறைவேற்றாததோடு, தொடர்ந்து அரசு நம்மை தண்டித்து வருவது, அந்த இயற்கைக்கே பொறுக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
    கொரோனாவிடமிருந்து மக்களை காப்போம்! உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் டாக்டர்களுக்கு கவுரமான ஊதியத்தை வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *