கோயில்களின் அனைத்து சந்நிதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று இந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் இறுதியில் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. இதன்பின் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தமிழகம் முழுவதும் கோயில்கள் திறக்கப்பட்டன. எனினும் பிரதான அம்பாள், சுவாமி சந்நிதிகளில் மட்டுமே பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்து அறநிலையத் துறையின் ஆணையர் பிரபாகர் அனைத்து கோயில்களின் நிர்வாக அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
“கோயில்களில் பக்தர்கள் சுவாமியை வழிபட பிரதான அம்பாள், சுவாமி சந்திதிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இனிமேல் கோயிலின் சுற்றுப் பிரகார சந்திதிகளுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும். எனினும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டி நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.