தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா, விலக்குவதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் நேற்றும் இன்றும் முதல்வர் பழனிசாமி நீண்ட ஆலோசனை நடத்தினார்.
இதன்பின் தமிழக அரசு இன்று பிற்பகல் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வற்ற ஊரடங்கு அமல் செய்யப்படும். இதர நாட்களில் தற்போதைய தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும்.
ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். சென்னை ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படலாம். சென்னை ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடலாம். ஓட்டல்களில் ஏசி பயன்படுத்தக்கூடாது.

ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்துக்கு குறைவான வருமானம் உடைய கோயில்களை திறக்கலாம். எனினும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் கோயில், மசூதி, தேவாலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை.
சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் இரவு 7 மணி வரை செயல்படலாம். அத்தியாவசிய, அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களையும் ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நடைமுறை தொடரும். மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில் சேவைகளுக்கான தடை தொடரும். பஸ் சேவைகளுக்கு அனுமதி இல்லை.
மறுஉத்தரவு வரும் வகையில் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து தடை நீடிக்கும். குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே பஸ்களை இயக்க அனுமதி இல்லை. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். திரையரங்குகள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், பூங்காக்களை திறக்க அனுமதி இல்லை. ஷாப்பிங் மால்களை திறக்கக்கூடாது. ஊட்டி, கொடைக்காலம், ஏற்காடு போன்று சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி இல்லை.