தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
இதன் பலன் அடுத்த சில வாரங்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 2,167 பேர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த புள்ளிவிவரங்கள் நாள்தோறும் மாலையில் வெளியிடப்படுகிறது. இதன்படி நேற்று மாலை வெளியிடப்பட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் மிக அதிகபட்சமாக சென்னையில் 2,167 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டவாரியாக மதுரை 303, செங்கல்பட்டு 187, திருவள்ளூர் 154, வேலூர் 144, காஞ்சிபுரம் 75, திருச்சி 87, கோவை 65 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவரை 1,141 பேர் பலி
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,141 ஆக உயர்ந்துள்ளது.
தலைநகர் சென்னையில் இதுவரை 53,780 பேர் கரோனா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 846 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் ரெமிடெசிவிர் உள்ளிட்ட சில மருந்துகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிப்பது தெரியவந்துள்ளது.
மருந்து கொள்முதல்
இதைத் தொடர்ந்து ரெமிடெசிவிர் மருந்தில் 42,500 குப்பிகள், டோசில்ஜுமேப் மருந்தில் 1,200 குப்பிகள், எனோஜாபாரின் மருந்தில் ஒரு லட்சம் குப்பிகளை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 1,769 மருத்துவர்கள் உட்பட 14,814 மருத்துவ பணியாளர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.