தமிழகத்தின் மொத்த வரிவருவாயில் 70 சதவிகிதத்துக்கு மேல் ஈட்டிக் கொடுக்கக்கூடிய வணிகவரித்துறையில் 2036 பணியிடங்கள் குறைக்கப்பட உள்ளதற்கு வணிகவரிப் பணியாளர் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வணிகவரிப் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் நா.ஜனார்த்தனன், மாநில பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“கடந்த 8.7.2021-ம் தேதி வணிகவரி கமிஷனரை கோரிக்கைகள் நிமித்தமாக சந்தித்தோம். மாநிலத்தின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும் அதைப் பெருக்கிடவும் பெருகி வரும் வேலைப்பளுவை ஈடுசெய்யும் அலுவலர் நிலையில் கூடுதல் பணியிடங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். அப்போது வணிகவரித்துறையில் 1.6.2019-ல் துறையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்பின்படி 2,036 பணியிடங்கள் கூடுதல் பணியிடங்களாக கணக்கிடப்பட்டு அவைகளை முந்தைய ஆட்சியில் அரசுத்துறைகளில் ஆட்குறைப்பிற்காக ஆதிசேஷய்யா ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடும் முயற்சி எடுத்து அவைகளைத் தடுத்து நிறுத்தி வைத்திருந்தோம். தற்போது அப்பணியிடங்களுக்கு மாற்றாக அலுவலர் நிலையில் கூடுதல் பணியிடங்களை வழங்க நடவடிக்கை எடுக்க கேட்கப்பட்டது.
ஆனால் அப்பணியிடங்களை ஆட்குறைப்பு குழுவிற்கு பரிந்துரை செய்துவிட்டதாகவும் அவை பற்றி பேச வேண்டாம் என்று வணிகவரி ஆணையர் தெரிவிக்கிறார். அதை ஏற்க முடியாது. இந்த முடிவு தற்போது பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது. தமிழக அரசு அரசு ஊழியர்களின் நலன் காக்கும் அரசாக செயல்படும் என்பதில் நாங்கள் அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளோம்.
2036 பணியிடங்களும் கீழ்நிலைப் பணிகளான உதவியாளர், இளநிலை உதவியாளர், பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்களாகும். இப்பணியிடங்கள் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள மாணவர்களின் அரசுப் பணி கனவை நனைவாக்கும் பணியிடங்களாகும். இப்படிப்பட்ட பணியிடங்களை குறைப்பது என்பது சமூக நீதிக்கு எதிரான செயலாகவும் நாங்கள் பார்க்கிறோம்.
மாநிலத்தின் நிதி வருவாயைப் பெருக்க வேண்டிய நிலையில் துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டிய சூழலில் இருக்கக்கூடிய பணியிடங்களை ஒப்படைப்பது என்பது எப்படி வலுவான கட்டமைப்பை உருவாக்க உதவும் என்ற கேள்வியை முன்வைக்கிறோம்.
இதுதொடர்பாக வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை சந்தித்து முறையிட்டுள்ளோம். விரிவாக பேசுவதற்கு நேரம் ஒதுக்கித் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார். நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரையும் சந்தித்து இதுபற்றி முறையிட உள்ளோம். கடந்த ஆட்சி காலத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு இயக்கங்களை நடத்தியுள்ளோம். வணிகவரித்துறை உட்பட அனைத்து துறைகளிலும் இந்தப் பிரச்னை உள்ளது.
எனவே சமூகநிதியைக் காக்கும் நோக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்ஆட்குறைப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்ட குழுவினை கலைக்கவும் எதிர்கால இளைஞர்கள் மாணவர்களின் அரசு வேலைக் கனவை நனவாக்கும் நடவடிக்கையினை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.