தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை மாநில மையத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் மு.அன்பரசு தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம் வேலை அறிக்கை தாக்கல் செய்தார். மாநில நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பின்னர் மாநில தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் கூறுகையில், “கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்து பலகட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தியிருக்கிறோம். அப்போதெல்லாம் சங்க நிர்வாகிகளை அழைத்து கடந்த அ.திமு.க அரசு பேசவில்லை. இந்தநிலையில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் தி.மு.க அரசு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கடந்த 27.1.2021-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மதுரையில் நடைபெற்ற போராட்ட ஆயத்த மாநாட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். அப்போது தி.மு.க ஆட்சி வந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்கப்படும் என்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கடந்த அ.தி.மு.,க ஆட்சியின் போது போராடிய அரசு ஊழியர்களின் மீது ஏற்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் கைவிடப்படும். 17 b குற்றக் குறிப்பாணைகள் ரத்து செய்யப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
தி.மு.க தேர்தல் அறிக்கையிலும் மேற்கண்ட உறுதிமொழிகளை உள்ளடக்கிய வாக்குறுதிகளோடு அரசு ஊழியர்களின் பணி தொடர்பான பிரச்னைகளை தீர்த்து வைக்க மாநில நிர்வாகத் தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து காலமுறை ஊதியமும் குறைந்தபட்ச ஓய்வூதியமும் பணிக்கொடையும் வழங்கப்படும் என்றும் அரசு ஊழியர்களின் குடும்ப நல நிதி 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அரசு ஊழியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டம் மேலும் பயனளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

நாங்கள் எதிர்பார்த்தப்டியே தி.மு.க ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை பரிசீலனை செய்யப்படவில்லை. இந்தநிலையில் கடந்த ஒரு வார காலமாக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது மீண்டும் 58 ஆக குறைக்கப்படும் என்ற அறிவிப்பு பத்திரிக்கைகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்துக் கொண்டும் போட்டி தேர்வுகளுக்கு தயாராக உள்ள நிலையில் இளைய தலைமுறையினருக்கும் சாதகமான அறிவிப்பு என்பதால் சமூக அக்கறை கொண்டு எங்களது சங்கமும் வரவேற்கிறது. கடந்த ஆட்சியின் போது அரசு ஊழியர்கள் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 2020-ம் ஆண்டு 58-ல் இருந்து 59 ஆகவும் 2021-ம் ஆண்டு 59-ல் இருந்து 60-ஆகவும் உயர்த்தி அரசாணைகள் வெளியிடப்பட்ட போது அதனை எங்கள் அமைப்பு சார்பில் கடுமையாக எதிர்த்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம்.
ஆனால் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கான பணப்பலன்களை பத்திரங்களாக வழங்க உள்ளதாகவும் பத்திரிக்கை செய்திகள் வந்து கொண்டுள்ளன. அதனை தமிழக அரசு மறுத்து இதுகூரை செய்தி வெளியிடாதது ஓய்வு பெறும் நிலையில் உள்ள அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மன கலக்கத்தையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஓய்வு பெற்றபின் ஓய்வு கால வாழ்க்கையில் திட்டமிடடுள்ள குழந்தைகளின் படிப்பு, திருமணம், கடன் நேர்செய்தல் போன்றவற்றை நிறைவேற்ற முடியாமல் பொருளாதார சிக்கலுக்கு தள்ளப்படுவார்கள் என்று அச்சமும் ஏற்படுகிறது. எனவே தமிழக அரசு ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பணப்பலன்களை பணமாக வழங்க உத்தரவாதப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழுவிலும் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். `விடியல் வரும்’ என்ற கனவோடு காத்திருக்கும் அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளான புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல், சத்துணைவு, அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து முறையான காலமுறை ஊதியம் வழங்குதல், சாலைப் பணியாளர்களின் 41 மாதகால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்தி அதற்கான ஊதியம் வழங்குதல்,
ஓய்வு பெறும் வயதினை மீண்டும் 58 ஆக மாற்றுதல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ணப்படைப்பு மீண்டும் வழங்குதல் குறைக்கப்பட்ட சேமநலநிதிக்கான வட்டி விகிதத்தை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைள் தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்திட வேண்டும் என்று மாநில செயற்குழுவில் தீர்மானம் இயற்றியுள்ளோம். எனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு அலுவலகங்களில் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிவிடவும் கடந்த அ.தி.மு.க அரசால் பறிக்கப்பட்ட முடக்கப்பட்ட எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.