`கோயம்பேடு மார்க்கெட்டை அரசு திறக்குமா..!’ – கொளத்தூர் ரவி கேள்வி

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் கொளத்தூர் த.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தமிழகம் முழுவதும் கொரனா தொற்று வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு முழுமையான ஒத்துழைப்பை தமிழக அரசுக்கு கொடுத்து வருகிறது. வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கின்ற நிலையிலும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கடைகளை அடைத்து நேர கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகின்றனர்.

கொரோனா பரவலை தடுக்கும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தற்போது அரசு தளர்வுகள் அளித்து கடை திறப்பதற்கு வழிவகை செய்ததற்கு தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

சென்னை என்றாலே கோயம்பேடு வியாபாரிகள் என்ற நிலையை தமிழகம் முழுவதும் பரவச் செய்த கொரோனா, கோயம்பேடு மார்க்கெட்டை மூட செய்தது. சிறு வணிகர்கள் முதல் பெரிய வணிகர்கள் வரை மிகப் பெரிய பாதிப்புக்கு உள்ளானார்கள். பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு திருமழிசைக்கு காய்கறி மார்க்கெட்டை மாற்றிய தமிழக அரசிற்கு கோயம்பேடு வணிகர்கள் மற்றும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பை கொடுத்துள்ளனர் என்பதனை தமிழக அரசிற்கு நினைவூட்டுகிறோம்.

கோயம்பேடு மார்க்கெட்

தற்பொழுது தளர்வு அறிவிக்கின்ற நிலையிலும் கோயம்பேடு மார்க்கெட் திறக்காமல் சிறு வணிகர்கள், மளிகை மொத்த வியாபாரிகள், மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கின்றோம். ஆகவே அரசு உடனடியாக இதில் தலையிட்டு கோயம்பேடு காய்கறி அங்காடி, மலர் அங்காடி, பழ அங்காடி மற்றும் மளிகை கடைகளை திறப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *