தஞ்சை அரசு மருத்துவமனையில் தீ குழந்தைகளுடன் அலறியடித்து ஓடிய பெண்கள்

தஞ்சை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயில் இருந்து தப்பிக்க குழந்தைகளுடன் பெண்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.

தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை செயல்படுகிறது. தஞ்சை மற்றும் சுற்றுவட்டார ஏழை மக்கள் இந்த மருத்துவமனையை நம்பியே வாழ்கின்றனர். இங்கு மகப்பேறு சிகிச்சை பிரிவு, பெண்களுக்கான சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு செயல்படுகின்றன.


இந்த மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் நள்ளிரவில் திடீரென தீப் பிடித்தது.தீ மளமளவென்று பரவுவதை பார்த்த நிறைமாத கர்ப்பிணிகள், மற்றும் பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள் செய்தவதறியாது தவித்தனர். குழந்தைகளை தூக்கிக் கொண்டு பெண்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.


தகவல் அறிந்து தீயணைப்பு படை வீரர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். வானாளவிய உயரத்துக்கு பற்றி எரிந்த தீயை அவர்கள் நீண்ட நேரம் போராடி அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பில்லை.


ஜோதிகா சுட்டிக் காட்டிய மருத்துவமனை
சில மாதங்களுக்கு முன்பு விழா ஒன்றில் பேசிய நடிகை ஜோதிகா, தற்போது தீ விபத்து நேரிட்ட தஞ்சை அரசு மருத்துவமனையின் அவலத்தை சுட்டிக் காட்டினார். அதன்பின் மருத்துவமனை வளாகம் சுத்தம் செய்யப்பட்டு ஏராளமான விஷ பாம்புகள் பிடிக்கப்பட்டன.

தற்போது அதே மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பழைமையான இந்த மருத்துவமனையில் போதிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *