கடந்த 2018 முதல் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அண்மையில் நடந்த ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனமும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் போட்டியிட்டது. இதில் டாடா சன்ஸ் வெற்றி பெற்றது.
ரூ.18,000 கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா சன்ஸ் ஏலத்தில் எடுத்தது. இதில் ரூ.2,700 கோடி அரசுக்கு பணமாக கிடைக்கும். மீதமுள்ள ரூ.15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனை டாடா சன்ஸ் அடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 1932-ம் ஆண்டில் ஜேஆர்டி டாடாவால் தொடங்கப்பட்ட நிறுவனத்தை கடந்த 1953-ல் நாட்டுடைமையாக்கப்பட்டது. சுமார் 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா மீண்டும் டாடாவின் கைக்கு மாறியுள்ளது. ஏர் இந்தியாவிடம் 141 விமானங்கள் உள்ளன.