`நான் சாகப்போகிறேன். ஏனென்றால் என் நன்னடத்தையை சந்தேகப்படுகிறார்கள்!’- ஏரியில் சடலமாக மிதந்த சென்னை ஆசிரியை

நான் சாகப்போகிறேன், ஏனென்றால் என் நடத்தையை சந்தேகப்படுகின்றனர் என்று கடிதம் எழுதி வைத்து குழந்தையோடு சென்ற ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கைக்குழந்தையை போலீஸார் தேடிவருகின்றனர்.

சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு டி.ஆர்.ஆர்.நகர், திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (25). இவர் பள்ளியில் படிக்கும்போதே பக்கத்து வீட்டில் குடியிருக்கும் பாலாஜியை காதலித்தார். இருவரும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டர். பாலாஜி, டைல்ஸ் ஓட்டும் வேலை செய்து வர இருவரும் சந்தோஷமாக குடும்பம் நடத்திவந்தனர்.

இளவரசி(5), நிக்கிதா(3), தபித்தால் (8 மாதம்) என அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. இதற்கிடையில் திருமணமான சில ஆண்டுகளிலேயே புவனேஸ்வரி, தீக்குளித்தார். அதுதொடர்பான வழக்கில் புவனேஸ்வரி அளித்த வாக்குமூலம் அவரின் குடும்பத்தைக் காப்பாற்றியது. அதன்பிறகு புவனேஸ்வரி, தன்னுடைய குழந்தைகளுக்காக வாழ்ந்துவந்தார்.

இந்தச் சூழலில் கடந்த 24-ம் தேதி புவனேஸ்வரி, தன்னுடை கடைசி மகள் தபித்தாலை மட்டும் தூக்கிக் கொண்டு வெளியில் சென்றர். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அதனால் ஆவடி காவல் நிலையத்தில் 27-ம் தேதி புவனேஸ்வரின் தம்பி செல்வம் புகார் அளித்தார். அதில் என்னுடைய அக்காவுக்கும் மாமா பாலாஜிக்கும் அடிக்கடி தகராறு நடக்கும். எனது அக்காள் மீது சந்தேகப்பட்டு அக்கா கணவரும் மாமியார் ஜெயபாக்கியமும் சண்டைபோடுவார்கள் அப்போது நானும் அம்மாவும் சமரசம் செய்வோம்.

கடந்த 24-ம் தேதி அக்காளுக்கும் அவரின் வீட்டின் அருகில் குடியிருக்கும் ஸ்டெல்லா என்பவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் அக்காள் கணவர் பாலாஜி, ஸ்டெல்லா முன் அக்காளை அசிங்கமாக திட்டியுள்ளார் அதனால் அக்காள் மனஉளச்சலில் இருந்தார். எங்களிடம் ஸ்டெல்லா முன் என்னை பாலாஜி அசிங்கமாக திட்டியது கேவலமாக இருக்கிறது என்று புலம்பிக் கொண்டே இருந்தாள். அவளுக்கு நானும் அம்மாவும் ஆறுதல் கூறினோம். ஆனால் அக்காள் சோகமாக இருந்தாள்.

கடந்த 25-ம் தேதி குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு தபித்தாலை மட்டும் தூக்கிக் கொண்டு அக்காள் சென்றள். அவள் வீடு திரும்பவில்லை. அதனால் அவளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே அவளையும் குழந்தையையும் கண்டுபிடித்து தரும்படி கேட்டுள்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். புகாரின்பேரில் ஆவடி போலீஸார் வழக்குபதிவு செய்து புவனேஸ்வரி மற்றும் குழந்தையை தேடிவந்தனர்.

இந்தநிலையில், சேக்காடு ஏரியில் சிவப்பு நிற சேலை அணிந்த இளம்பெண்ணின் சடலம் மிதப்பதாக ஆவடி காவல் நிலையத்துக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீஸார் புவனேஸ்வரியின் தம்பி செல்வத்தை அழைத்துக் கொண்டு அங்கு சென்று சடலத்தை மீட்டனர். அந்தப்பெண் குறித்து விசாரித்த போது அது மாயமான புவனேஸ்வரி எனத் தெரியவந்தது. புவனேஸ்வரியின் தம்பி செல்வமும் அடையாளம் காட்டினார். இதையடுத்து அவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏரியிலிருந்து புவனேஸ்வரியின் சடலம் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. கைக்குழந்தை தபித்தாலை போலீஸார் தேடிவருகின்றனர்.

இதுகுறித்து செல்வம் கூறுகையில், “அக்காள் புவனேஸ்வரி, பாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். திருமணத்துக்குப்பிறகு அக்காள் நிம்மதியாக வாழவில்லை. அதனால்தான் தீக்குளித்தார். நல்ல வேளை அக்காள் உயிர்பிழைத்துக் கொண்டார். அதன்பிறகும் அவளை தினந்தோறும் மாமாவும் அக்காளின் மாமியாரும் சந்தேகப்பட்டு பேசினர். கடந்த சில தினங்களுக்குமுன் சண்டை வந்தது. மாமியார் அசிங்கமாக பேசுகிறார்கள் என்று அக்காள் கூறினாள். நானும் மாமாவும் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தோம். நான் போட்டோ கொடுக்க வந்தபோதுதான் அக்காள் இறந்தது தெரியவந்தது. கைக்குழந்தை எங்கே என்று தெரியவில்லை. மாமா பாலாஜி, அவரின் அம்மா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையாவது உயிரோடு காப்பாற்றி கொடுத்தால் போதும்”என்றார்.

புவனேஸ்வரியின் அம்மா கலா கூறுகையில், “என் பொண்ணு சந்தோஷமாக இருப்பாள் என ஆசைபட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. வீட்டுக்குள்ளேயும் வெளியேயிலும் வைத்து என் மகளுடன் சண்டை போடுவார்கள். அதை அவர் பெருமையாக நினைப்பார். அசிங்கமாக பேசுவார்கள். அப்போது எல்லோரும் வேடிக்கை பார்ப்பார்கள். இந்த நரகத்தில் இருப்பதை விட செத்துவிடலாம் என்று குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றுள்ளாள் புவனேஸ்வரி. அப்போது அவளின் தோழி கூப்பிட்டுள்ளாள். அதைக் கவனிக்காதபோல புவனா போய்விட்டாள். தூக்கிக் கொண்டு போன குழந்தை என்ன ஆனாள் என்று தெரியவில்லை” என்றார் கண்ணீர்மல்க.

ஆவடி போலீஸார் கூறுகையில், “புவனேஸ்வரி ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக புவனேஸ்வரி குழந்தையோடு தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். புவனேஸ்வரியின் சடலம் மட்டும் கிடைத்துள்ளது. குழந்தை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. புவனேஸ்வரி டைரி, அவர் எழுதிய கடிதம் ஆகியவை அடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம். புவனேஸ்வரி சடலம் கிடந்த ஏரியில் தேடும் பணியில் ஈடுபட்டுவருகிறோம்” என்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, விசாரித்து வருகிறார். புவனேஸ்வரியின் செல்போன் மற்றும் சிக்னல் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.

புவனேஸ்வரி, டைரியில் ஜூலை 23-ம் தேதி ஒரு தகவலை குறிப்பிட்டுள்ளார். அதில் அவர், “நான் சாகப் போகிறேன். ஏனென்றால் என் நன்னடத்தையை தினசரி மற்றவர்கள் காயபடுத்துகின்றனர். எனது எல்லா பிரச்சனைகளையும் மறக்க கடவுளிடம் தினசரி காலை வேண்டுவேன்.
ஆனாலும் என்னை ஒரு ஜோக்கராக போல் மற்றவர்கள் நடத்தினர்.அரசு இவர்களை போன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எழுதியுள்ளார்.

இன்னொரு கடிதத்தில் “என் அன்பான கணவனுக்கு நான் இன்னும் சிறிது நாள்கள்தான் உன்னுடன் வாழ முடியும் என்று நினைக்கிறேன். என் உடம்பின் வலிகளை என்னால் தாங்க முடியவில்லை. நான் எவ்வளவோ போராடிவிட்டேன். என்னால் முடியவில்லை. நம் மூன்று பிள்ளைகளையும் நீ நன்றாக கவனித்து கொள்ள வேண்டும். என்னை புரிந்து கொள்ளாமல் நீ பேசிய பேச்சுக்களால் நான் இப்படி செய்தது தவறு என்று இப்போதுதான் புரிந்து கொண்டேன்.

என் வாழ்வில் நான் எந்த ஒரு கஷ்டத்தையும் உனக்கு தர விரும்பவில்லை. இனி நீ நினைத்ததாலும் என்னை கெட்ட வார்த்தைகளைக் கொண்டு கூப்பிட முடியாது. பிள்ளைகளையாவது சரியாக வளர்த்து படிக்க வைக்க வேண்டும். என்பதே என் கடைசி ஆசை. எக்காரணம் கொண்டும் மறுபடியும் மதுவை (குடியை) தேடாதே. பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம். தமிழ் மீடியம் படித்தாலும் பரவாயில்லை. தயவு செய்து நன்றாக படிக்க வை. உன்னிடம் நான் கேட்பது இது ஒன்றுதான்” என்று எழுதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *