கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வரும் 31-ம் தேதி ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கிராமங்களில் கோயில், தேவாலயம், மசூதி, தர்காக்களை வழிபாட்டுக்கு திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி கடந்த 1-ம் தேதி முதல் சிறிய கோயில்கள் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன.
எனினும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு தரப்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் மீது புனித நீரை தெளிக்கக்கூடாது. அருகருகே நிற்கக்கூடாது, அமரக்கூடாது. சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக வட்டங்களை வரையலாம். சுவாமி சிலைகள், புனித நூல்களை தொடாமல் இருப்பது நல்லது. வழிபாட்டுத் தல நுழைவு வாயிலில் கை கழுவ சோப்பு, தண்ணீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 6-ம் தேதிக்குப் பிறகு சிறிய வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட அனுமதி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கொரியா, கென்யா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் மீது புனித நீரை தெளித்ததால் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் பரவியது. எனவே வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.