துர்கை அம்மனுக்கு மாஸ்க் அணிவிக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.
எனினும் சிலர் பொறுப்பின்றி முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உத்தரப்பிரதேசத்தின் ஈட்டா நகரில் அமைந்துள்ள துர்கை அம்மன் கோயிலில், அம்மன் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.
கோயிலிக்கு சென்ற பக்தர்கள் துர்கை தேவியே மாஸ்க் அணிந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அதோடு மட்டுமன்றி கோயிலின் பூசாரிகள் பக்தர்களுக்கு முகக்கவசங்களை பிரசாதமாக கொடுத்தனர்.
மாஸ்க் அணிந்த அம்மனை புகைப்படம் எடுத்த பக்தர்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் வைரலாக பரவி வருகிறது.