உள்ளாட்சி அமைப்புகளின் ஒப்புதல் இன்றி ரூ.2,369 கோடி மதிப்பிலான சாலை பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 100-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
“ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை தீட்டவும், அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக்கொடுக்கவும் மத்திய அரசின் 14-வது நிதிக்குழு பரிந்துரையின் பேரில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு 2019-20 நிதி ஆண்டில் சாலை மேம்பாடு மற்றும் பாலங்கள் கட்டமைப்புக் காக ரூ.2,369.86 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையைக் கொண்டு சாலைப் பணிகளை மேற்கொள்ள ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் தேவை.
ஆனால், ஊராட்சி மன்றங்களின் ஒப்புதல் பெறாமல் இதுதொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றா மல், தமிழகஅரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அலுவலர்கள் மூலமாக தன்னிச்சையாக தமிழக அரசு இதற்கான திட்டங்களைத் தேர்ந் தெடுத்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக, ரூ.2,369.86 கோடி மதிப்பிலான இந்த திட்டங்களின் கீழான டெண்டர்களை ஆளுங் கட்சி பிரமுகர்கள் சுட்டிக்காட்டும் நபர்களுக்கு வழங்க தமிழக அரசு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
எனவே, சட்டவிரோதமான இந்த டெண்டர் அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும்” அவர்கள் மனுவில் கோரியிருந்தனர்.
இதனை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வெள்ளிக்கிழமை விசாரித்தார். ரூ.2,369 கோடிக்கான சாலை டெண்டர்கள் ரத்து செய்யப்படுகிறது.
புதிய டெண்டர்களை சட்ட விதிகளுக்கு உட்பட்டு வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.